ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியர்களுக்கு புதிய ஊதிய வரன்முறை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் பாசன உதவியாளர், அலுவலக உதவியாளர், டிரைவர், துப்புரவாளர், காவலர் என பல்வேறு நிலைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம், அதாவது மாதம் ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், திண்டுக்கலை் சேர்ந்த ராஜா செல்வன் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தினக்கூலி ஊழியர்கள், ஒப்பந்த பணிக்கு இடைத்தரகர்கள் மூலம் நியமித்துள்ளனர். இதனால், இந்த ஊழியர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 2003 முதல் பணிபுரிந்து வரும் இவர்களுக்கு முறையான வருகைப்பதிவேடும் இல்லை. எனவே, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி உரிய ஊதியம் வழங்க வேண்டும். என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களை போல் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவர்களது ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதிய வரைமுறை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, தகுதியான 3407 தினக்கூலி ஊழியர்களை புதிதாக ஊதியம் வரன்முறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித்துறையின் கீழ் பணியாற்றும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர ஊழியர்கள் போல் ஊதிய வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை பின்பற்றி தகுதியான 3407 பேரின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் நீதிபதி குடியிருப்பு, முதல்வரின் வீடு, அமைச்சர்களின் குடியிருப்பு, சபாநாயகர், துணை சபாநாயகர் வீடுகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களும் இந்த ஊதிய வரன்முறையின் கீழ் வருவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வரும் மாதம் முதல் வங்கி கணக்கில் புதிய ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் குறைந்த பட்சம் 18,500 ஊதியம் கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: