ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2ம் கட்ட தேர்தல் மாவட்டம் வாரியாக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியீடு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை : ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த மாவட்டங்களில் முதல் கட்ட தேர்தல், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது என்பது தொடர்பான விவரங்களை மாநில தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிரித்து 27 மாவட்டங்களில் உள்ள 312 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி மாவட்டம் வாரியாக முதல் கட்ட தேர்தல் நடைபெறும் ஊராட்சி எது, இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஊராட்சி ஒன்றியங்கள் எது என்பது தொடர்பான தகவல் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசிதழில் வெளிவந்த விவரம்:வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பாளர்கள் காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு பரிசீலனை 17ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். 19ம் தேதி மாலை 3 மணிக்குள் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். 27 மற்றும் 30ம் தேதி காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குபதிவு நடைபெறும்.

ஜனவரி 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் நடைமுறைகள் 4ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 6ம் தேதி பதவி ஏற்றுக் கொள்வார்கள். தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 11ம் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணையின் படி முதல் கட்ட தேர்தல் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் 27 மாவட்டங்களில் 158 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட தேர்தல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்கள் நடைபெறுகிறது என்ற முழு விபரங்கள் இந்த அறிவிப்பாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: