கர்ப்பிணி சத்து டானிக் தென்னைக்கு உரமானது: விலைக்கு விற்ற மருந்தாளுநர் பணி நீக்கம்

திருப்பூர்: திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.கார்டன் பகுதியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் காலை சுகாதார நிலையத்தில் இருந்து  மருந்து பாட்டில்கள் அடங்கிய 2 அட்டை பெட்டிகளை ஒரு நபர் பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பினார்.  அவரை பின் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றொரு பைக்கில் சென்றனர். அப்போது அந்த ஆசாமி வாவிபாளையம் சுகாதார நிலையத்திற்கு செல்லாமல் பூண்டி ரிங் ரோட்டில் சென்று பின்னர் அங்கிருந்து அங்கேரிபாளையம் ரோட்டில் சென்றுள்ளார். இதனால் அவரை பிடித்து கேட்டபோது, அந்த மருந்து பாட்டில்களை தென்னை மரங்களுக்கு மருந்தாக ஊற்றுவதற்காக மருந்தாளுனர் தனலட்சுமி கொடுத்ததாக கூறியதால் திடுக்கிட்டனர். பின்னர் அந்த நபரை பிடித்துச்சென்று அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார்  நடத்திய விசாரணையில் அந்த நபர் கோவை சீதாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது.

பெட்டியில் சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 100 மி.லி. இரும்பு சத்து மருந்து பாட்டில்கள் (அயர்ன் அண்டு போலிக் ஆசிட் சிரப் ஐபி) 200 இருந்தது. மேலும் அந்த மருந்து இந்த மாதத்துடன் (டிசம்பர்) காலாவதியாவதும் தெரிய வந்தது.  இதையடுத்து திருப்பூர் மாநகர்  நல அலுவலர் மருத்துவர் பூபதி விசாரணை நடத்தியுள்ளார். இதில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருந்துகளை தனலட்சுமி விற்றது தெரியவந்தது. இதையடுத்து தனலட்சுமி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: