அமமுக கட்சியை பதிவு செய்த கோப்புகளை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று  புகழேந்தி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி  தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன், அக்கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.  இந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகிய புகழேந்தி அ.ம.மு.க வை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், தேர்தல் ஆணைய விதிப்படி, ஒரு கட்சியை பதிவு செய்ய  அக்கட்சியின் சார்பில் 100 தனி நபர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நான் உள்பட 100 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தோம்.  பின்னர், தினகரனின் நடவடிக்கையில் உடன்பாடின்றி நான் உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என  அ.ம.மு.க வில் இருந்து 15 பேர் விலகி விட்டோம். இதனால், கட்சியை பதிவு செய்ய அளித்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

  இந்த வழக்கு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அ.ம.மு.கவை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து புகழேந்தி சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.  அந்த மனு மீது அக்டோபர்  24ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியாக அ.ம.மு.க பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார். அப்போது, புகழேந்தி தரப்பில் ஆஜரான வக்கீல், அ.ம.மு.க வை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் நாங்கள் அளித்த புகார் குறித்து எந்த கோப்புகளிலும் குறிப்பிடப்படவில்லை. விதிகளின் படி தேர்தல் ஆணையம் எங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க உரிய வாய்ப்பை வழங்கவில்லை.

கட்சியில் இருந்து விலகியவர்களின் பிரமாண பத்திரத்தையும் பரிசீலனைக்கு எடுத்து, அ.ம.மு.கவை அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கு அக்கட்சியின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி விட்டால், அவர்கள் அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக மாற்று நபர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாமா என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் அ.ம.மு.கவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் பதிவு செய்தது தொடர்பான அனைத்து கோப்புகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.Tags : Election Commission ,High Court ,Chennai The Election Commission , Ammk Party, Files, Election Commission, Madras High Court
× RELATED மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்களை...