மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் சட்டத்தை எதிர்த்து வழக்கு : திருமாவளவன் தொடர்ந்தார்,..ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்துக்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மேயர், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த நவம்பர் 19ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது.  இந்த சட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மேயர் மற்றும் தலைவர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது.

 எனவே, இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு மறைமுகமாக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும்,  சட்டமன்ற மற்றும்  நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை. எனவே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: