புதுவை அருகே கரும்பு தோட்டத்தில் போலீசை துப்பாக்கி முனையில் தாக்கிவிட்டு தப்பிய ரவுடி கும்பல்: ஒருவர் கைது; நாட்டு வெடிகுண்டு, துப்பாக்கி பறிமுதல்

திருபுவனை: புதுவை திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த ரவுடி கும்பல் துப்பாக்கி முனையில், போலீசை தாக்கி  விட்டு தப்பி ஓடியது. இதில் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கியை பறிமுதல்  செய்தனர்.   புதுச்சேரியில் மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த  பிரபல ரவுடி ஜனா என்ற ஜனார்த்தனன் (32) மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தலைமறைவான ஜனாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே ஆண்டியார்பாளையத்தில் உள்ள கரும்பு  தோட்டத்தில் மோட்டார் கொட்டகையில் ஜனா தலைமையில் ரவுடி கும்பல் பதுங்கியிருப்பதாக  திருபுவனை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரை  கண்டதும் தாங்கள் வைத்திருந்த கத்தி, நாட்டு வெடிகுண்டு, நாட்டு துப்பாக்கி  ஆகியவற்றைக் கொண்டு ரவுடி கும்பல் துணிகரமாக மிரட்டியது. அஞ்சாமல்  காவல்துறை முன்னேறிய நிலையில், தாங்கள் வைத்திருந்த கத்திகளை வீசியதோடு  துப்பாக்கியாலும் போலீசாரை சுட முயன்றனர்.

 இதில்  நடராஜன், பார்த்தசாரதி என்ற 2 காவலர்களை சுற்றிவளைத்து கும்பல் தாக்கியது. எஸ்ஐ ராஜசேகர் தான் வைத்திருந்த ரிவால்வரை எடுத்து  ரவுடி கும்பலை சுடுவதற்கு தயாரானார். பீதியடைந்த ரவுடி  கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது. எஸ்ஐ உள்ளிட்ட 6  காவலர்களும் அவர்களை  கரும்பு தோட்டத்தில் விரட்டி பிடிக்க முயன்ற நிலையில்  கண்டமங்கலம் அடுத்த சின்னபாபு சமுத்திரத்தைச் சேர்ந்த சாத்ராக் ராகவன் (35)  என்பவர்  தடுமாறி பள்ளத்தில் விழுந்து கையில் காயமடைந்து கீழே விழுந்தார். அவரை போலீசார் பிடித்தனர். மற்ற அனைவரும் கரும்பு தோட்டத்தில் பதுங்கிய  நிலையில் அவர்களை இரவு 7 மணி வரை போலீசார் தேடினர்.  இருட்டாகிவிட்டதால்,  தேடுதல் பணியை கைவிட்ட போலீசார் கரும்பு தோட்டத்தை  சுற்றிலும் விடியவிடிய ஐஆர்பிஎன் காவலர்களை நிறுத்தி கண்காணிப்பு  மேற்கொண்டனர். நேற்று காலை 50க்கும் மேற்பட்ட ஐஆர்பிஎன் காவலர்கள் கூடுதலாக  வரவழைக்கப்பட்டனர்.  கரும்பு தோட்டத்தில்  துப்பாக்கியுடன் புகுந்த ரவுடி கும்பலை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

 இதனிடையே சாத்ராக்கை பிடித்த போலீசார், அவர்கள் முதலில் பதுங்கியிருந்த பகுதியில் சோதனை நடத்தி 2 நாட்டு வெடிகுண்டு, 2 பட்டாக்கத்தி, ஒரு நாட்டு துப்பாக்கி,  ஈட்டி, வெடிமருந்து பாக்கெட், மிளகாய் பொடி, லேப்-டாப், செல்போன், டார்ச்  லைட் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.  பின்னர் சாத்ராக்கை  திருபுவனை காவல் நிலையம் அழைத்து வந்து துருவி, துருவி விசாரணை  மேற்கொண்டனர். சீனியர் எஸ்பி (சட்டம்-ஒழுங்கு) ராகுல்  அல்வாலும்,  சாத்ராக் ராகவனிடம் விசாரணை  மேற்கொண்டார்.   இந்த சம்பவத்தையடுத்து திருபுவனை காவல் சரகத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேட்டையாடி விருந்து வைத்த ஜனா :

3 ஏக்கர் பரப்பிலான கரும்பு தோட்டத்தில், ஜனா தலைமையில் ரவுடி கும்பல் பல நாட்களாக முகாமிட்டது தெரியவந்துள்ளது. மேலும் சமையல் பாத்திரங்கள், ஸ்டவ், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளும் அங்கு இருந்தது. வெளியில் இருந்து சிக்கன், மட்டன்  என வாங்கி வந்து மதுவுடன் விருந்து நடந்துள்ளது.  பறவைகள், காட்டுப்பன்றிகளை துப்பாக்கி மூலம் வேட்டையாடி அங்கேயே சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

Related Stories: