கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் அருகே நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(29). லாரி டிரைவர். இவரது மனைவி காயத்ரி(25). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. இதில் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை இறந்துவிட்டது.  இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பமானார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 5ம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பச்சிளங்குழந்தையுடன் காயத்ரி, மருத்துவமனையில் தாய்மார்களுக்கான வார்டில் இருந்தார். நேற்று மதியம் காயத்ரியை பார்க்க அவரது மாமியார் மற்றும் குழந்தைகள் வந்தனர். இதையடுத்து குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து விட்டு காயத்ரி கீழே சென்றார். அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் மேலே வந்து பார்த்தார். அப்போது படுக்கையில் இருந்த குழந்தை மாயமாகி இருந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்தார். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தெரிவித்தனர். டிஎஸ்பி குமார் மற்றும் மகளிர் போலீசார் வந்து காயத்ரியிடம் விசாரணை நடத்தினர்.  அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் குழந்தையை யார் எடுத்துச் சென்றார்கள் என தெரியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் யாரேனும் குழந்தையை எடுத்து செல்லும் வீடியோக்கள் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்டதா அல்லது மீண்டும் பெண் குழந்தை என்பதால் மறைத்துவிட்டு நாடகமாடுகிறார்களா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>