×

விலை உயர்வை கட்டுப்படுத்த இறக்குமதி தமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்: ஏறியது போல இறங்குமா விலை?

சென்னை: விலை உயர்வால் தற்போது எகிப்தில் இருந்தும், வெளிமாநிலங்களில்  இருந்தும் தமிழகத்துக்கு புதிய வெங்காயம் வர தொடங்கியுள்ளது. இதனால், வரும்  நாட்களில் வெங்காயம் விலை குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்துக்கு  ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ேபான்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம்  வந்தது. மழையால் அங்கிருந்து வரத்து அடியோடு குறைந்தது. இதனால்,  வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த மாதம்  தொடக்கத்தில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.20, ரூ.30 என்று விற்கப்பட்டது.  

அதாவது, கிலோ ரூ.140 வரை விற்கப்பட்டது. இதே போல ரூ.30, ரூ.40க்கு  விற்கப்பட்ட சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ரூ.150 வரை  விற்கப்பட்டது. இது மொத்த மார்க்கெட்டில் தான் இந்த விலை. ஆனால் சில்லரை  விலையில் சின்ன வெங்காயம் ரூ.220 வரையும், பெரிய வெங்காயம் ரூ.200 வரை  விற்கப்பட்டது. எந்த ஆண்டிலும் வெங்காயம் இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை.  இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  வெங்காயம் விலை  உயர்வால் மக்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து தமிழக அரசு ஆந்திராவில் இருந்து  பெரிய வெங்காயத்தை வாங்கி அரசின் மலிவு விலை காய்கறி கடை, ரேஷன் கடைகளில்  கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது.

இதே போல நாடு முழுவதும் தேவை அதிகரித்ததால்  விலைகள் தாறுமாறாக உயர்ந்தது. விலை உயர்வை கண்டித்து மக்கள் வீதிகளுக்கு  வந்து போராட தொடங்கினர். அது மட்டுமல்லாமல் குறைந்த விலையில் வெங்காயம்  விற்கப்பட்ட இடங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்கள்  அரங்கேறின. இந்த நிலையில் வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி  செய்யப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இந்த நிலையில் விலை  உயர்வால் 60 நாட்கள் விலைய வேண்டிய வெங்காயத்தை, 45 நாட்களில் அறுவடை செய்ய  தொடங்கியுள்ளனர். அந்த வெங்காயம் தற்போது வரத் தொடங்கியுள்ளது.

அதே போல  எகிப்து நாட்டில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம்  குளிர்சாதன  கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு  கொண்டுவரப்பட்டது. இந்த வெங்காயம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.
எகிப்தில் இருந்து  திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு, மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள வெங்காயத்திற்கான  தனி மார்க்கெட்டுக்கு நேற்று 150 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தும் 100 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இதனால் நேற்று மார்க்கெட்டில் தரத்தை பொறுத்து ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ110 முதல் ரூ130 வரை விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே ரூ200க்கு விற்று வந்த பெரிய வெங்காயம் ரூ110க்கு விற்றது.

இதேபோல,  கப்பல் மூலம் மும்பைக்கு வந்து, அங்கிருந்து திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு 40 டன்  பெரிய வெங்காயம்  வந்தது. கிலோ ரூ.100க்கு இந்த வெங்காயம் விற்கப்பட்டது. சென்னை  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 200 டன் அளவிலான எகிப்து வெங்காயம் வர  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வெங்காயம் 200 கிராம் முதல் 600  கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த  வெங்காயம்  விற்பனைக்கு வந்தால் வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இது  குறித்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க  ஆலோசகர் சவுந்தரராஜன் கூறுகையில், “ தற்போது புதிய வெங்காயம் வரத்  தொடங்கியுள்ளது. இதனால், வெங்காயம் விலை கிலோ ரூ.10 வரை குறைந்துள்ளது.  வெங்காயம் இன்னும் வரும் பட்சத்தில் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது.  எகிப்தில் இருந்து வெங்காயம் வருகிறது என்கின்றனர். அதுவும் வந்தால்  இன்னும் விலை குறையும்” என்றார்.

எண்ணெய் குடிக்கும் மெகா வெங்காயம்
எகிப்து  பாலைவன பிரதேசமாக இருந்தாலும் பாதி இடங்களில் விவசாயம் செய்யப்படுகிறது.  அவ்வாறுதான் அங்கு வெங்காயமும் பயிரிடப்படுகிறது. அங்குள்ள வெங்காயம்  இந்தியாவில் இருக்கும் வெங்காயத்தை போல இருக்காது. வித்தியாசமானதாக  இருக்கும். ஒவ்வொரு வெங்காயமும் தேங்காய் போல இருக்கும். அதுவும்  குறைந்தபட்சம் 200 கிராம் முதல் அதிகப்பட்சமாக 600 கிராம் வரை ஒவ்வொரு  வெங்காயமும் இருக்கும். இந்தியாவில் மகாராஷ்டிராவில் இருந்து வரும்  வெங்காயத்திற்கு என்று தனி ருசி உண்டு. அதுமட்டுமல்லமல் அதிக அளவு எண்ணெய்  குடிக்காது. சமையலில் வெங்காயத்தை பயன்படுத்தும் போது குறைந்த அளவில்  எண்ணெய் பயன்படுத்தினால் போதும். ஆனால், எகிப்து வெங்காயம் அதிக அளவு  எண்ணெய் குடிக்கும். இங்குள்ள வெங்காயம் போல ருசியும் இருக்காது என்றும்  கூறப்படுகிறது.  

இருப்பு வைக்க மேலும் கட்டுப்பாடு
வெங்காயம் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுதவிர, வெங்காயம் இருப்பு வைக்க கடந்த செப்டம்பரில் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இதன்படி சில்லரை வியாபாரிகள் 100 குவின்டாலுக்கு மேலும், மொத்த வியாபாரிகள் 500 கிலோவுக்கு மேலும் இருப்பு வைக்கக்கூடாது.  இந்நிலையில் ‘வெங்காயம் இருப்பு வைக்க தடை காலவரையறையின்றி நீட்டிக்கப்படுகிறது என உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு, இருப்பு வைக்க கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் சில்லரை வியாபாரிகள் 5 டன்களும், மொத்த வியாபாரிகள் 25 டன்களும் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. நேற்று இந்த அளவு மேலும் குறைக்கப்பட்டது. இதன்படி இனி சில்லரை வியாபாரிகள் 2 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Egypt , Price, Import, Tamil Nadu, Egypt Onion
× RELATED கந்தகக்கல்: நீதிபதிகளின் ஆகாய வர்ண ரத்தினம்