×

சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  தமிழக அரசையும், முதலமைச்சர், அமைச்சர்களையும் விமர்சித்ததாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, பா.ஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி,  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி.தினகரன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த அனைத்து வழக்குகளும் நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், அவதூறு வழக்குகளில் தனி நபர்களை விமர்சித்தார்களா, அவர்களின் அரசு பணியை விமர்சித்தார்களா என்பது குறித்து கீழமை நீதிமன்ற விசாரணைக்கு பிறகுதான் முடிவெடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முதல்வர் மற்றும் அமைச்சர்களை பொறுத்தவரை, அவர்கள் தனி நபர்கள் அல்ல, அமைச்சர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் பணி செய்வதால் அவர்களை  விமர்சித்தால் அவர்கள் வகிக்கும் பொறுப்பை விமர்சித்ததாகவும், அரசை விமர்சித்ததாகவும்தான்  கருத்தில் கொள்ள முடியும் என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, சில அவதூறு வழக்குகளில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பதிவு செய்ததுடன், பதில் மனு தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு  விசாரணையை ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தார்.

Tags : cancellation ,court ,High Court ,Special Court in Petition , Defamation case, Government, High Court
× RELATED தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி...