தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ல் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஐஜி ஆய்வு

தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 1997ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு 23 ஆண்டுகள் கழித்து தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடந்து வருகிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. பின்னர் மூலவர் மற்றும் சுவாமி சிலைகள் முன்பாக திரையிடப்பட்டது. உற்சவர் சுவாமிகளுக்கு மட்டுமே பூஜைகள் நடந்து வருகிறது. மேலும் கும்பாபிஷேகத்துக்கு 8 கால யாகசாலை பூஜைகள் நடத்த ஏதுவாக கோயிலின் அருகே யாகசாலை பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் கும்பாபிஷேக தேதி மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் பெரிய கோயிலில் தஞ்சை சரக காவல்துறை டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.

பின்னர் டிஐஜி லோகநாதன் கூறுகையில், தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதற்காக பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை முதற்கட்டமாக ஆய்வு செய்து வருகிறோம். கோயிலுக்கு முக்கிய விருந்தினர்கள், பக்தர்கள் வந்து செல்லும் வழி, வாகனங்கள் நிறுத்துமிடத்தை தேர்வு செய்து வருகிறோம். கோயில் கோபுரம் வெளியே தெரிவதால் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதை காட்டிலும் வெளியே நின்று தரிசிப்பது உகந்ததாகும். அது எந்தெந்த இடங்கள் என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: