டாஸ்மாக் விற்பனையில் முறைகேடு கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக வழக்கு: மேலாண் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

மதுரை:  டாஸ்மாக்கில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மேலாண் இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனியைச் சேர்ந்த உதயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகள் நடத்தப்படுகிறது. சில்லரை விற்பனையின்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு ரசீது தருவதில்லை. விற்பனை நேரம் அல்லாத நேரத்தில் கள்ளச்சந்தையில் அதிகளவு விலைக்கு விற்கின்றனர். இந்த பணத்தை அதிகாரிகள் பங்கிட்டு கொள்கின்றனர். இதனால் அரசுக்கும், மது அருந்துவோருக்கும் அதிகளவு இழப்பு ஏற்படுகிறது. இதன்மூலம் டாஸ்மாக் விற்பனையில் மட்டும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. குறிப்பாக தேனி மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களுக்கு ₹10 வரை அதிகமாக விற்கின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் ஸ்டாக் இருப்பு, விற்பனை ரசீது உள்ளிட்ட கணக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. எனவே உரிய நடவடிக்கையும், ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டு முறைகேட்டிலிருந்து, டாஸ்மாக் நிறுவனத்தை காப்பாற்றத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் மனுவிற்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர், தேனி கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் தலைமை கண்காணிப்பு அலுவலர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories: