பண்ருட்டி அருகே பரபரப்பு: ஊராட்சி தலைவர் பதவி ரூ50 லட்சத்துக்கு ஏலம்

* அதிமுக பிரமுகருக்கு விடப்பட்டது

* விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஊராட்சி தலைவர் பதவி ரூ50 லட்சத்துக்கு அதிமுக பிரமுகருக்கு ஏலம் விடப்பட்டது தமிழகம்  முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அடிமட்டம் வரை ஜனநாயகம் தழைத்தோங்கவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.   ஆனால் இதனை குழி தோண்டி புதைக்கும் வகையில் பணபலம் கொண்டவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி  பதவிகளை விலை கொடுத்து வாங்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது.

ஊராட்சி ஒன்றியத்திலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலும் போட்டியிட நேற்று ஒருசிலர் மட்டும் மனுக்களை பெற்றுச்சென்றனர். இந்நிலையில்  பண்ருட்டி அருகே நடுகுப்பம் ஊராட்சியில் தேர்தல் இப்போதே களைகட்டியது. அங்கு தலைவர் பதவிக்கு யார் நிற்பது என போட்டா போட்டி நிலவுகிறது. இதில் ஏற்கனவே தலைவராக இருந்த அதிமுக பிரமுகரும், துணைதலைவராக இருந்த தேமுதிக பிரமுகரும், தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. அதன்படி நேற்று தலைவர் பதவிக்கான வேட்பு மனு வாங்குவதற்கு முன் அங்குள்ள ஒரு கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடினர்.

இதில் ஊருக்கு கோயிலை யார் கட்டி தருகின்றாரோ, அவரை தலைவராக தேர்வு செய்யலாம் எனக்கூறி விவாதம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு தலைவர், துணைத்தலைவராக இருந்தவர்களே போட்டியிடலாம் என முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி  தலைவர் பதவிக்கு ரூ50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ15 லட்சமும் ஏலம் போனதாக தெரிகிறது. இந்த தகவல் வாட்ஸ்அப்பில்  வைரலாக பரவியது. இது குறித்து விசாரித்தபோது, ஒருவரும் சரியான தகவலை தெரிவிக்கவில்லை. ஏலம் கேட்டதாக கூறப்படும் சக்திவேலிடம் கேட்டபோது, சென்ற முறை தலைவராக இருந்தேன். அதனடிப்படையில் ஊரில் உள்ள பொது கோயிலை பொதுமக்களுக்காக கட்டி வருகிறேன்.

தற்போது தேர்தலில் நிற்பதால், மிகவும் பழமையான கோயிலை கட்டி தருவதாக வாக்குறுதியளித்துள்ளேன். நான் ஏலம் எதுவும் கேட்கவில்லை. ஒருசிலர்  ரூ50 லட்சம் ஏலம் எடுத்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளேன் என்றார். மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிடிஓக்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன் நடுகுப்பம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: