×

வியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை

புதுடெல்லி: வியட்நாமில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மொபைல் போன் உதிரி பாகங்கள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் மட்டும் வியட்நாமில் இருந்து 100 கோடி டாலர் மதிப்பிலான மொபைல் போன் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்திய மொபைல் போன் மற்றும் எலக்டரானிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டிலேயே 100 கோடி டாலர் மதிப்பிலான மொபைல் போன் உதிரி பாகங்கள் வியட்நாமில் இருந்து இறக்குமதி ஆகியுள்ளன. ஆனால், 2017-18 நிதியாண்டில் இது 60 கோடி டாலராக மட்டுமே இருந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப துறையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தற்போது அதிக வரி விதிப்புகள் உள்ளன. இவற்றை குறைக்க வேண்டும். மாறாக வரியை அதிகரித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். மத்திய அரசு 12க்கும் மேற்பட்ட மொபைல் பாக இறக்குமதி மீது 15 சதவீதம் வரையிலும், மொபைல் போன்களாக இறக்குமதி செய்ய 20 சதவீதம் வரையிலும் வரி விதித்தது. அதோடு, வெளிநாட்டு மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், வியட்நாமில் இருந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி முறைகேடாக இறக்குமதி செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இது மின்னணு தேசிய கொள்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை அடைய தடையாக இருக்கும். எனவே அரசு இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Vietnam: Manufacturers Concern ,Vietnam , Risk of imports , mobile components, Vietnam
× RELATED மழையால் நிரம்பிய கண்மாய் கரைகள் உடையும் அபாயம்