×

ரஞ்சி ரவுண்டப்...

* ரஞ்சி கோப்பை 2019-20 சீசன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. பல்வேறு இடங்களில் நடைபெறும் லீக் ஆட்டங்களில், 10 அணிகள் முதல் இன்னிங்சில் ஆல் அவுட்டாகின.

* தும்பா, செயின்ட் சேவியர் கல்லூரி மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் எலைட் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், கேரளா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன் குவித்துள்ளது. பொன்னம் ராகுல் 97 ரன் (174 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஜலஜ் சக்சேனா 32, ராபின் உத்தப்பா 102 ரன் (221 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் சச்சின் பேபி 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

* விஜயவாடாவில் நடப்பு சாம்பியன் விதர்பா அணிக்கு எதிராகக் களமிறங்கிய ஆந்திரா அணி 211 ரன்னில் சுருண்டது. கேப்டன் ஹனுமா விஹாரி அதிகபட்சமாக 83 ரன் (155 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். விதர்பா பந்துவீச்சில் ஆதித்யா சர்வதே 4, ரஜ்னீஷ் குர்பானி 3, யாஷ் தாகூர் 2, லலித் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் முடிவில் விதர்பா விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்துள்ளது.

* தர்மசாலா, இமாச்சலப்பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்  சவுராஷ்டிரா அணியுடன் நடைபெறும் எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், டாசில் வென்று பேட் செய்த இமாச்சல் அணி 42.3 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட், சிராக் ஜனி, பிரேரக் மன்கட் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா, முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்துள்ளது (28 ஓவர்). ஸ்னெல் பட்டேல் 42, வாசவதா 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர் (புஜாரா 2 ரன்). நேற்று ஒரே நாளில் 17 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

* கொல்கத்தா, வீடியோகான் அகடமி மைதானத்தில் மணிப்பூருக்கு எதிராகக் களமிறங்கிய மிஸோரம் அணி 16 ஓவரில் 65 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தாருவர் கோஹ்லி 34, லால்மங்கையா 16 ரன் எடுக்க, 6 வீரர்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். மணிப்பூர் வேகம் ரெக்ஸ் சிங் (19 வயது) 8 ஓவரில் 4 மெய்டன் உட்பட 22 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் கைப்பற்றினார். முதல் நாள் முடிவில் மணிப்பூர் 7 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்துள்ளது. சிங்கங்பாம் சிங் 89 ரன் விளாசினார். ரெக்ஸ் சிங் 58, தோக்கோம் சிங் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

Tags : Ranji Roundabout , Ranji Roundabout ...
× RELATED ரஞ்சி ரவுண்டப்...