‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதுப்பிக்க எதிர்ப்பு பாளை பஸ் நிலையத்தில் இன்று கடைகள் அடைப்பு

நெல்லை: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79 கோடியில் முழுமையாக இடிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு அடுத்த  கட்டமாக டவுன் பொருட்காட்சி மைதானத்தில் நவீன வணிக வளாகம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை டவுன் போஸ் மார்க்கெட்டும் நவீனப்படுத்தப்பட உள்ளது. அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க மாநகராட்சி  முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகம், முன்னாள் துணை மேயர் குடியிருப்பு வளாகம், மாநகராட்சி ஊழியர் குடியிருப்பு இருந்த இடம் உள்ளிட்ட அனைத்தையும் இடித்து  அப்புறப்படுத்திவிட்டு, இங்கும் புதிய நவீன வணிக வளாகத்துடன் பஸ் நிலையத்தை கட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்காக நெல்லை மாநகராட்சி சார்பில் இந்த பகுதியில் உள்ள 52 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற டிச.19ம் தேதிக்குள் அனைத்து கடைகளையும் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில்  கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை பெற்ற வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து வியாபாரிகள் அனைவரும் இந்த நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பாளை பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புறத்தையொட்டி உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பழக்கடைகள், சலூன், ஸ்டேஷனரி ஆகிய கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பு கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே சந்திப்பு பஸ் நிலையத்தை இடித்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு  பணிகள் முடிவடைவதற்கு முன்பே பாளை பஸ் நிலையத்தில் புதுப்பிக்கும் பணியை தொடங்கினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். நாங்கள் பாளை பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே உடனடியாக  இந்தப் பணியை செய்யாமல் சில ஆண்டுகள் கழித்து செய்யலாம். இன்று நெல்லை கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: