கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும் தொடர் மழையால் தென்மாவட்ட நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

நெல்லை: தென் மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முழுமையாக கைகொடுத்துள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன் பாசனப்பணிகளும் அதிகளவில் நடக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிக விவசாய பணிகள் நடைபெறும் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களும் அடங்கும். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை செழிப்பாக பெய்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் விவசாயப்பணிகள் நடக்க  வாய்ப்பு உள்ளது. ஆனால் பருவநிலை மாற்றங்கள், ஓசோன்படல பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக குறித்த நேரத்தில் பருவமழை பெய்யவில்லை. பெரும்பாலும் வறட்சியையே ெதன்மாவட்டங்கள் சந்தித்து  வந்தன. இதனால் வறட்சி பாதித்த மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டன.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரளவு தென்மேற்கு பருவமழை கைகொடுத்தாலும் வடகிழக்கு பருவமழை முழுமையான மழைப்பொழிவுகளை கடந்த ஆண்டுகள் தராமல் இருந்தன.  இந்த நிலையில் கடந்த தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தென் மாவட்டங்களுக்கு முழுமையான பலனை தந்துள்ளது. கடந்த அக்டோபர்  20ம் தேதிக்கு பின்னர் பெய்யத் தொடங்கிய இந்த  பருவமழை தொடர்ந்து இடைவெளியின்றி சராசரியாக பெய்து வருகிறது. இதனால் அணைகள், நீர்நிலைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. பிரதான அணைகள் நிரம்பினாலும் பெரிய பாதிப்பை தராத வெள்ளம் ஏற்பட்டது.

தற்போதும்  தாமிரபரணி நதியில் சராசரியாக 2 ஆயிரம் கனஅடிக்கு மேல் கடந்த சில தினங்களாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. கால்வாய் மூலம் பலன் பெறும் குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 5 ஆண்டாக நிரம்பால் இருந்த மானூர் பெரியகுளம் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இந்த குளம் நிரம்பினால் 3 போக நெல் மகசூல் பெறமுடியும் என விவசாயிகள் நம்புகின்றனர். இதன் அருகே உள்ள பள்ளமடை குளம்  நிரம்பாவிட்டாலும் அங்கும் தண்ணீர் பெருக்கெடுக்க தொடங்கியுள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் குப்பை மேடாகவும் கழிவுகளின் ஆக்கிரமிப்பிலும் சிக்கியிருந்தன. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இந்த குளங்கள்  பல்வேறு சமூக அமைப்புகள், பொதுநல சங்கங்கள் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டன. இதன் எதிதொலியாக மாநகர பகுதி குளங்களும் நிரம்பி ததும்புகின்றன. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விவசாய பணிகள்  முழுவீச்சில் நடக்கின்றன. மேலும் நிலத்தடி நீர் மட்டம் 3 தென்மாவட்டங்களிலும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வரும் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க வாய்ப்பில்லை என எதிர்பார்கப்படுகிறது.

வேய்ந்தான்குளத்திற்கு பறவைகள் வருகை

நெல்லை புதிய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள வேய்ந்தான்குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த குளத்தில் சீரமைப்பு பணியின் போது மைய பகுதிகளில் சிறிய அளவில் மணற்குன்றுகள்  பறவைகளுக்கு மரம் வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டன. இந்த குன்றுகளில் தற்போது பறவைகள் வந்து இளைப்பாறுகின்றன. இவை பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளன. விரைவில் வெளிநாட்டு பறவைகளும் இங்கு முகாமிட வாய்ப்புள்ளது

Related Stories: