×

இங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தேர்தல்: இந்திய வாக்காளர்களை கவர முயற்சி...இந்து கோவிலில் பூஜை செய்த பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: இந்துகோவிலுக்கு செல்வது இந்தியில் பிரசார பாடல் பாடுவது என தேர்தல் பிரசார களத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலக்கி வருகிறார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’  நடவடிக்கையை செய்து முடிப்பதில் இழுபறி ஏற்பட்டது. அக்டோபர் 31-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கிலாந்து நாடாளுமன்றம், இதை ஒப்புக்கொள்ளவில்லை.  கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கிடுக்கிப்பிடி போட்டது.

ஆனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டால், சாக்கடை குழியில் விழுந்து சாவேன் என்று சொன்ன பிரதமர் போரிஸ் ஜான்சன், கடைசியில் இறங்கி வந்தார். இதையடுத்து ஐரோப்பிய  கூட்டமைப்பு, இந்த கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, ஜனவரி மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்தது. ஆனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல் நடத்தி மக்களின் ஆதரவை பெற  தீர்மானித்தார். ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகாது என்ற வாக்குறுதியை பிரதமர் அளிக்கிறபோது, திடீர் தேர்தலை ஆதரிக்க தயார் என எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பின்  அறிவித்தார்.

இதையடுத்து, டிசம்பர் 12-ம் தேதி ‘திடீர்’ தேர்தல் நடத்துவதற்கான மசோதா, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் நாடாளுமன்ற மக்கள் சபையில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 438 எம்.பி.க்களும்,  எதிராக 20 எம்.பி.க்களும் ஓட்டு போட்டனர். பெருவாரியான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால், அது நிறைவேறியது. இதையடுத்து வரும், டிசம்பர் 12-ம் தேதி தேர்தல் என்பது உறுதியாகி விட்டது.

முன்னதாக, தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த போரிஸ் ஜான்சன், “ஒரு கடினமான தேர்தலை சந்திக்க நான் தயாராகி விட்டேன்” என்று கூறினார். இந்நிலையில், தேர்தலில் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றாக வேண்டும் என்று பிரதமர்  போரிஸ் ஜான்சன் களம் இறங்கியுள்ளார்.

அதன் ஒருபகுதியாக, இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டலில் உள்ள மிகப்பெரிய இந்து கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார். மேலும், புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி உடன்  கைகோர்க்க உறுதி மொழியையும் எடுத்து கொண்டார். இந்தியில் பிரசாரம் செய்யும் பாடல் போரிஸ் ஜான்சனுக்காக வாக்களிக்கவும் என்ற பொருள் படும் பாடல் ஒன்று சமூக வலை தளங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.Tags : Boris Johnson ,election ,UK , Prime Minister Boris Johnson, who is worshiping in the Hindu temple ...
× RELATED ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்