×

ஆயுதச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: உரிமம் பெற்ற ஒருவர் இனி 2 ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி!

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆயுத சட்டம், துப்பாக்கி உரிமம் வைத்திருப்போர் இனி 2 ஆயுதங்களை மட்டுமே வைத்திருக்க வழிவகை செய்கிறது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்ற இரு அவைகளிலும், பல்வேறு காரியங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், மக்களவையில் ஆயுத சட்டத்திருத்த மசோதாவை உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, கடந்த 28ம் தேதியன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீதான விவாதங்கள் நிறைவுபெற்ற நிலையில், மக்களவையில் இன்று ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஒருவர் 3 துப்பாக்கிகள் வரை வைத்துக்கொள்ளலாம் என்று இருப்பது 2 துப்பாக்கிகளாக குறைக்கப்படுவதற்கு இந்த ஆயுத சட்டம் வகை செய்கிறது. 3வது துப்பாக்கியை 90 நாட்களுக்குள் அரசிடமோ, விற்பனையாளரிடமோ திரும்ப ஒப்படைக்க வேண்டும். கள்ளத்தனமாக துப்பாக்கி தயாரிப்பது, விற்பது போன்ற குற்றங்களுக்கு வழக்கமான ஆயுள் தண்டனைக்கு (14 வருடங்கள்) பதிலாக ஆயுட்காலம் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்படும். துப்பாக்கி அனுமதி (லைசென்ஸ்) 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுவதுடன், மின்னணு முறையில் அனுமதி வழங்க ஆயுத சட்டம் வகை செய்கிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஆயுதச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Lok Sabha , Arms Amendment Bill, Lok Sabha, Parliament
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...