×

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இன்னலைச் சந்திக்கும் நிலையில் பாஜக அரசு தூங்குகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் மக்கள் இன்னலைச் சந்திக்கும் நிலையில் பாஜக அரசு தூங்குகிறது என்று காங்கிரஸ் கட்சியி்ன் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாட்டில் வெங்காயத்தின் விலை பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாயை எட்டியுள்ளது. சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெங்காயம் விலையைக் குறைக்கவும், கட்டுக்குள் வைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்த போதிலும் விலை குறையவில்லை.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கிலோ 200 ரூபாயைத் தொட்டுவிட்டது. பெட்ரோல் விலை லிட்டர் 75 ரூபாயாக உயர்ந்துவிட்டது. விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துன்பத்தைச் சந்தித்து வருகிறார்கள். ஆனால் பாஜக அரசு இன்னும் தூக்கத்திலேயே இருப்பதுபோலவே தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தங்களுடைய பணக்கார நண்பர்களுக்காக ரூ.5.5லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்ய இருக்கிறது. 6 விமான நிலையங்களை தன்னுடைய வசதியான நண்பர்களுக்கு வழங்க இருக்கிறது. ஆனால் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.3ஆயிரம் கோடியாக குறைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் வசதியானவர்கள் ரசகுல்லா சாப்பிடுவார்கள். ஆனால் மதிய உணவில் பள்ளிக்குழுந்தைகள் உப்பும், ரொட்டியும் சாப்பிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து காங்கிரஸ் கட்சி கூறுகையில், திட்டமிடப்படாத வகையில் ஜிஎஸ்டி வரி அறிமுகம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வெங்காய இறக்குமதி குறித்து மத்திய அரசு கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அளித்த விளக்கத்தில், பல்வேறு மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காயத்தின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள வெங்காயம் ஜனவரி முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில்தான் இந்தியா வந்து சேரும் என்பதால் அதன்பின்தான் நிலைமை சீரடையும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.


Tags : Priyanka Gandhi ,BJP , Priyanka Gandhi alleges high prices, people suffer, BJP sleeps
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களில்...