சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐ.டி.ஐ படிக்கும் 7 மாணவர்கள் இன்று மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளனர். பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்க போலீசார் தடைவிதித்திருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் தடையை மீறி கடற்கரையில் குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் 7 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது அதில் 3 மாணவர்கள் திடீரென மாயமாகியுள்ளனர். எஞ்சிய மாணவர்கள் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். பிறகு எங்கு தேடியும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து உடனடியாக அருகிலிருக்கும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

Advertising
Advertising

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அச்சமயம் லோகேஷ், சர்வேஸ்வரன், ஆகாஷ் உள்ளிட்ட மூன்று  பேர் கடலில் மூழ்கி மாயமாகி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் லோகேஷ் என்ற மாணவரை மீட்டு அடையாறில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மற்ற மாணவர்கள் சர்வேஸ்வரன், ஆகாஷ் ஆகியோர் கடலில் மூழ்கி இருப்பதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அருகிலிருக்கும் மீனவர்களின் உதவியோடும், மேலும் கடலோர காவல்படையின் உதவியை கொண்டும் தற்போது பெசன்ட் நகர் கடற்கரையில் நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Related Stories: