காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா: இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுபேற்பதாக அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் காலியாகவுள்ள சிவாஜி நகர்,கே.ஆர்.புரம் உள்ளிட்ட 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத ஆகிய மூன்று கட்சிக்களுக்கிடையே கடும் போட்டி நிலவியது. 15 தொகுதிகளிலும் பதிவான 66.49 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது. ஆரம்பம் முதலே தபால் வாக்குகள் எண்ணப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டதில், பாஜ 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தனர்.

தற்போது, பாஜக 10 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சை வேட்பாளர் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மத சார்பற்ற ஜனதாள கட்சி அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி பெரும்பான்மையுடன் தொடர 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 12 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், முதல்வர் எடியூரப்பாவின் அரசு ஆபத்தில் இருந்து தப்பியுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற கட்சியின் தலைவராக உள்ள நான், ஜனநாயத்தை மதிக்க வேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு, சட்டமன்ற குழுத்தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அவர்களிடம் சமர்ப்பித்துள்ளேன். அதுமட்டுமல்லாது, கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் நான் ராஜினாமா செய்துள்ளேன். மக்கள் கொடுத்துள்ள ஆணையை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுரா உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 12 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் அதில் பல இடங்களை தற்போது பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>