சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு வெங்காயத்தை பரிசளித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்ற சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை முதல் அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (டிச. 9)  தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்திக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்செய்தியில், ‘சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,   நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட காலமாக பணியாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முன்மாதிரியான தன்மை, மூத்த காங்கிரஸ் தலைவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது பலம்,  கண்ணியம், இரக்கம் மற்றும் கருணை ஆகியவை எங்களை ஒன்றிணைத்து எங்களை பலப்படுத்தியுள்ளன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான குமாரி செல்ஜா, மணீஷ் திவாரி, ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா, மஹிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் ஆகியோர்  தங்கள் கட்சித் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் முதல் அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் மற்றும் அமைச்சர்கள்  எம்எல்ஏக்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது, காங்கிரசாருக்கு முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சித் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார்கள். வெங்காயத்தின் விலை  உயர்வை சுட்டிக்காட்டும் வகையிலும் வெங்காய விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசைக் கண்டிக்கும் வகையிலும் இந்த வெங்காய வழங்கப்பட்டதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதற்கிடையே, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களினால் துயரம் அடைந்த சோனியாகாந்தி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று ஏற்கனவே  அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: