பராமரிப்பின்றி கிடக்கும் மதுராந்தகம் ஏரி: மதகுகளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து கசிவதாக விவசாயிகள் வேதனை

செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரியில் இருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழுகொள்ளளவு எட்ட 4 அங்குலமே உள்ள நிலையில் ஏரியின் மதகுகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில் துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டிருப்பதே நீர்கசிவுக்கு காரணமாகும். சுமார் 2 ஆயிரத்து 411 ஏக்கர் பரப்பளவில் மதுராந்தகம் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. 5 மதகுகள் 110 ஹட்டர்கள் கொண்ட இந்த ஏரி நீரின் மூலம் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அவ்வப்போது பெய்யும் மழையால் 23 அடி முழுகொள்ளளவு கொண்ட மதுராந்தகம் ஏரி நிரம்பி காணப்பட்டாலும், இது சில நாட்களில் கானல் நீராகிவிடும்.

Advertising
Advertising

ஏனெனில் இந்த ஏரியின் அடிப்பகுதியில் இருந்து சுமார் 18 அடி வரை வெறும் மண்ணால் நிரம்பி உள்ளதாகவும் 50 ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாமல் இருப்பதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 18 அடியில் இருந்து 23 அடி வரையிலான நீரும் ஓட்டை உடைசலான ஷட்டர்கள் மூலம் வெளியேறி வீணாகி விடுகிறது. ஏரியை சுற்றுயுள்ள 110 ஹட்டர்களை பராமரிக்க கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 3 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் ஷட்டர்கள் துருப்பிடித்த நிலையிலேயே காணப்படுவதோடு ஆங்காங்கே ஓட்டை உடைசலாக காட்சியளிக்கிறது. இதனால் ஏரி நிரம்புவதற்கு முன்னரே ஆங்காங்கே தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனை தொடர்ந்து ஏரியில் இருக்கும் மதகுகளை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் கான்கிரீட் சுவர்கள் இன்றி வெறும் நெட் மற்றும் போல்ட் கொண்டு மதகுகள் அமைக்கப்பட்டிருப்பதால் ஏரி முழுகொள்ளளவு எட்டும் பட்சத்தில் நீரின் அழுத்தத்தை மதகுகள் தாங்குமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே மதகுகளை உடனடியாக சீர் செய்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். முறையான பாதுகாப்பும் இல்லாததால் அந்த பகுதி இளைஞர்கள் ஷட்டரை திறந்துவிட்டு குளிப்பதையும் காணமுடிகிறது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் பொதுப்பணி செயற்பொறியாளர் தியாகராஜனிடம் கேட்டபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அணுகி ஷட்டர்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

Related Stories: