‘இழந்த சொர்க்கத்தை மீட்டவர்’: இன்று(டிச.9) ஜான் மில்டன் பிறந்தநாள்

ஜான் மில்டன் எனும் மகா கவிஞனின் பிறந்தநாள் இன்று. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீப்சைட், பிரட் ஸ்ட்ரீட்டில் டிசம்பர்  9, 1608ல் வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஜான் மில்டன். அவரது தந்தை  அன்றைக்கு தோன்றிய தூய்மைவாத (Puritanism) இயக்க ஆதரவாளராக இருந்ததோடு,  கலை-இலக்கியத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்; இது மில்டனின் இளம்  வயதில் தாக்கத்தை உண்டாக்கியது. செயின்ட் பால் பள்ளியில் படிப்பைத்  துவங்கி, கிறிஸ்தவ கல்லூரியில் பயின்று, 1632ல் கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டம் பெற்றார் மில்டன். அத்துடன்  லத்தீன், எபிரேயம், இத்தாலிய மொழிகளில் நல்ல புலமை பெற்றிருந்தார் மில்டன்.உலக  மகாகவி என்று போற்றப்படும் ஷேக்ஸ்பியரின் மீது மில்டன் அளவற்ற காதல்  கொண்டிருந்தாலும், அவரது எண்ணமெல்லாம் பாதிரியாராக மாற வேண்டும் என்றே  இருந்தது. அந்த அளவிற்குக் கிறிஸ்தவத்தையும் - பைபிளையும் நன்கு  பயின்றிருந்தார். இந்த பயிற்சிதான் பின்னாளில் அவரது உலகப் புகழ் பெற்ற  படைப்புகளான ‘இழந்த சொர்க்கத்தையும்’, ‘மீண்ட சொர்க்கத்தையும்’ எழுதுவதற்கு  கருவானது. கல்வி பயணத்தை மில்டன் முடித்துக் கொண்டாலும், உடனடியாக வேலை  எதற்கும் செல்லவில்லை. மாறாக, வீட்டிலிருந்த படியே பல்வேறு அரும்பெரும்  நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இந்தக் காலத்திலேயே அவர் ஒரு சில புகழ்  பெற்ற கவிதைகளை எழுதியிருந்தார்.

Advertising
Advertising

அறிவுத் தாகமெடுத்த மில்டன் 1633ம்  ஆண்டு வெளியுலகப் பயணத்தைத் துவக்கினார். பிரான்ஸ், இத்தாலி உட்பட பல்வேறு  நகரங்களுக்கு இக்காலத்தில் பயணம் செய்தார். அவர் இத்தாலிக்கு சென்றிருந்த  போது, டெலஸ்கோப் வழியாக உண்மையை கண்டறிந்து, ‘உலகம் உருண்டையானது - சூரியனை  சுற்றிதான் இந்த புவிக் கோளம் இயங்குகிறது’ என்ற பேருண்மையை சொன்ன உலகமகா  அறிவியல் விஞ்ஞானி கலிலியோவை கண்டு அவருடன் உரையாடினார். இந்தச் சந்திப்பை  தனது வாழ்நாளில் முக்கியமான ஒன்றாகக் கருதினார் மில்டன். இந்த சந்திப்பைத்  தனது ‘இழந்த சொர்க்கம்’ என்ற காவியத்திலும் ஓரிடத்தில் வர்ணித்திருப்பார்.ஜான் மில்டன் தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தார். ‘இழந்த சொர்க்கம்’ என்கிற கவிதை நூலை பதினொரு ஆண்டுகள் இழைத்து, இழைத்து  உருவாக்கினார். அந்நூலில் கடவுளை எதிர்க்கும் சாத்தான் நாயகனாக நிமிர்ந்து  நிற்பான். அவன் பேசும் வரிகள் நம்மை என்னவோ செய்யும். அவனின் நியாயங்களை  அடுக்கித்தள்ளுவார் மில்டன். கடவுளை எதிர்த்து புரட்சி செய்த சாத்தான்  உடனிருப்பவர்களை எழுந்த நிற்கவைக்க முயல்வான். இதன் மூலம் கடவுள் போல  கருதிக்கொண்டு இருந்த மன்னனை எதிர்க்க சொல்லி மக்களை தூண்டினார் மில்டன்.  அவரின் நூலுக்கு எண்ணற்ற தடைகள் உண்டாயின. சில ஆயிரம் பிரதிகள் விற்கவே  வழியில்லாமல் நூல் நின்றது.

மில்டனின் கவிதைகள் அது வரை ஆங்கிலத்தில் இருந்த மரபுகளை உடைத்து தள்ளியது. எதுகை, மோனையோடு எழுதி வந்த முறையை தூக்கி எறிந்துவிட்டு நீண்ட வரிகளில் எக்கச்சக்க உவமைகளோடு மில்டன் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. ‘மில்டனைப் போல் எழுதுகிறாயே!’என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது. இவ்வளவு அழகான எழுத்து வன்மை கொண்ட மில்டனின் கண்பார்வை பாதியிலேயே பறிபோனது. எனினும் மனம்தளராமல் உதவியாளர்களின் துணையுடன் புகழ்பெற்ற நூல்களை எழுதி தள்ளினார். கண்கள் போனபிறகும் அயராது சிந்தித்துக் கொண்டிருந்த அவரது மூளை 1674ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி நின்றுபோனது. ஆயினும் அவரது கவிதைத்திறன் இன்றும் நம்மை மகிழ்வித்துக் கொண்டும், ஆச்சர்யப்படுத்திக் கொண்டும் இருக்கிறது.

Related Stories: