×

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீரில் மிதக்கும் விளைநிலங்கள்: அழுகும் பயிர்களால் விவசாயிகள் கவலை

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக நெல், வாழை உள்ளிட்டவை அழுகத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மக்களின் வாழ்வாதாரத்தையே மாற்றி போட்டது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், காலாங்கரை, வீரநாயக்கன்தட்டு, முள்ளக்காடு, பொட்டல்காடு, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகளவு காணப்பட்டது.

 இதன் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் பெருக தொடங்கியது. 10 நாட்களுக்கும் மேலாக நெல், வாழை உள்ளிட்டவை தண்ணீரில் முழ்கியுள்ளதால் பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் களிமண் பகுதி என்பதால் தண்ணீரை எளிதாக ஈர்ப்பதில்லை. சுற்றிலும் உள்ள அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் வெளியேற்ற வழியில்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒரு சிலர் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். ஏற்கனவே, விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாத சூழ்நிலையில் தற்போது விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீர் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அத்திமரப்பட்டி விவசாயி கலாமணி காலேப் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. இருந்தாலும் கடன் வாங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது பெய்துள்ள மழை எங்களின் வாழ்வாதாரத்தையே பாதித்துள்ளது. குடும்பத்தை எப்படி நடத்துவது, பிள்ளைகளின் படிப்பு செலவுகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கி கொண்டிருக்கிறோம். நல்ல விளைச்சல் விளைந்து விலை இல்லை என்று சொன்னால் கூட மனது ஆறிவிடும் ஆனால் இப்படி அழிவு வந்தால் எப்படி சமாளிப்பது. எனவே, அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும். வடிகால் ஓடைகளை சீரமைத்து வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும்’ என்றார்.

உளுந்து, பயறு விளைச்சல் பாதிப்பு

கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், புதூர், நாகலாபுரம், கழுகுமலை சுற்று வட்டார கிராமங்களில் புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் தனியாகவும், ஊடுபயிராகவும் விதைப்பு செய்த உளுந்து, பாசிப்பயறு செடிகளில் காய்கள் பிடித்து, நன்கு திரட்சியாகி காய்ந்த நிலையில், தற்போது அவைகளை பறிக்க வேண்டிய பருவமாக உள்ளன. ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் அடைமழையால், உளுந்து, பாசிப்பயறு செடிகளில் காய்ந்த நெத்துக்கள் மழைநீரில் நனைத்து முளைக்கும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் பல பகுதி விளைநிலங்களில் ஈரப்பதம் அதிகம் உள்ளதால், உளுந்து, பாசிப்பயறு செடிகள் அடியோடு கீழே சாய்ந்து பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. இதனால் விளைச்சல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரை சேர்ந்த விவசாயி மாரியப்பன் கூறுகையில், ‘கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் இந்தாண்டு உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்டது. பருவத்திற்கேற்ப மழை பெய்ததால் உளுந்து, பாசிப்பயறு செடிகள் நன்றாக வளர்ந்து பலன் தரும் நிலையில் இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பயிர்கள் கீழே சாய்ந்து விட்டன. நெத்துக்கள் அனைத்தும் முளைத்து வருகிறது. எனவே கோவில்பட்டி பகுதியில் உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்து கன மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 


Tags : Thoothukudi district ,Farmington , Farming,rotting crops,Thoothukudi district,than a week
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்