கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்

புதுடெல்லி: பல்வேறு மாநில அரசுகள், கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார். பாகிஸ்தான், வங்கதேசம், மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், ஜெயின்கள், பார்சி இனத்தவர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பா.ஜ வாக்குறுதி அளித்திருந்தது. இவர்கள் அனைவரும் அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததால் இந்தியாவில் குடியேறிவர்கள். இது போன்ற அகதிகள் 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்திருந்தால் மட்டுமே முன்பு குடியுரிமை வழங்கப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இது 5  ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவும் கருதப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் யாராவது சட்ட விரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் வழக்கை சந்தித்திருந்தால், அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும்.

இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக உள்ளதாகவும், மத ரீதியிலான நாட்டை உருவாக்க பாஜ முயற்சிப்பதாகவும் பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமாகி இருக்–்கிறது.  இது, ‘கடந்த 1985ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அசாம் ஒப்பந்தத்துக்கு எதிரானது. அதில், 1971ம் ஆண்டு மார்ச் 24ம் தேதிக்குப்பின் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மத பாகுபாடின்றி திருப்பி அனுப்பப்படுவர் என கூறப்பட்டிருந்தது,’ என வடகிழக்கு மாநில மக்கள் கூறி வருகின்றனர். இதனால், இந்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து வடகிழக்கு மாணவர்கள் அமைப்பினர் (என்இஎஸ்ஓ) நாளை 11 மணி நேர பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில், பலத்த எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார். இதன் மீதான விவாதம் இன்று மாலை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கடமை

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பாஜ பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறுகையில், ‘‘அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களை சந்தித்த சிறுபான்மையினர், பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது இந்தியாவின் கடமை. வங்கதேசத்திலிருந்து அசாமில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற கடந்த 1950ம் ஆண்டு ஒரு சட்டத்தை, அப்போதைய பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதில், கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த சிறுபான்மையினர், அந்த மசோதா வரம்புக்குள் வரமாட்டர்கள் என அறிவிக்கப்பட்டது என்பதை குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்ப்பவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்,’’ என்றார்.

ஜின்னாவுக்கு வெற்றி

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் அளித்த பேட்டியில், ‘‘ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிக்க பாஜ விரும்பவில்லை. அவர்களும் மற்ற மதத்தினர் போல் அண்டை நாடுகளில் அடக்குமுறையை சந்தித்தவர்கள்தான். காந்தி, நேரு, ஆசாத், அம்பேத்கர் போன்றவர்கள் மதத்துக்கும், நாட்டுக்கும் தொடர்பு இல்லை என நம்பினர். அனைத்து சமுதாய, அனைத்து மொழி பேசும் மக்களுக்கான சுதந்திர நாட்டை உருவாக்க அவர்கள் விரும்பினர்.  இதைத்தான் நமது அரசியலமைப்பும் கூறுகிறது. ஆனால், இதற்கு எதிராக பாஜ செயல்படுகிறது. மதம் சார்ந்த நாடு உருவாக்க வேண்டும் என்பது  பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் கருத்து. அதற்குத்தான் பாஜ தற்போது வழி வகுத்துள்ளது’’ என்றார்.

Related Stories: