×

பலாத்காரங்கள் பற்றி கருத்து கூறாமல் மவுனம் மோடியை கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?: காங்கிரஸ் கொந்தளிப்பு

புதுடெல்லி:  ‘நாட்டில் நடக்கும் பலாத்கார சம்பவங்களை பார்த்தும் மவுனமாக இருக்கும் பிரதமர் மோடியை நாட்டில் யாருமே கேள்வி கேட்க மாட்டார்களா?,’ என்று காங்கிரஸ் கடுமையாக  விமர்சித்துள்ளது. நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாலியல் பலாத்கார சம்பவங்களின் தலைநகராக இந்தியா மாறிவிட்டதாகவும், சர்வதேச சமூகங்கள் இந்தியாவை கேலி செய்வதாகவும் நேற்று முன்தினம் கருத்து கூறியிருந்தார். இதனை தொடர்ந்து நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக காங்கிரஸ் நேற்று குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘உன்னாவ், எட்டாவா, ஐதராபாத், பால்வால், பரிதாபாத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல் தொடர்கிறது. இந்தியாவின் ஆன்மா வலிப்பது போன்று பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு கூக்குரல் இடுகிறார்கள். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீரிழந்து விட்டதால் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். மோடி ஜீயோ அமைதியாக இருக்கிறார். எந்தவித வருத்தமும் இல்லை. எந்த கோபமும் இல்லை. ஒரு வார்த்தை கூட இது குறித்து பேசவில்லை. பிரதமரை யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? ஏன்?’ என்று கூறியுள்ளார்.மேலும், இதனுடன் காங்கிரஸ் ஆட்சியின் போது டெல்லியில் நடந்த பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விமர்சித்து கூறிய கருத்துகள் அடங்கிய வீடியோ பதிவையும் அவர் இணைத்துள்ளார்.

Tags : country ,Nobody ,Congress ,Modi ,anyone , commenting , rape, question Modi, Congress turmoil
× RELATED ரொம்ப பெரிய சாதனை லஞ்சம் வாங்குவதில் நம் நாடுதான் நம்பர் 1