தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு 80% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு  வேலைவாய்ப்பில் 80 சதவீதம்  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கர்நாடக  மாநிலத்தின் குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அதிகாரி மகிஷி தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை மாநில அரசிடம் தாக்கல்  செய்யப்பட்டாலும் அது அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மாநில  அரசின் சார்பில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களில்  கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என  உத்தரவிடப்பட்டது. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் தனியார்  நிறுவனங்கள், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும், மாநில  அரசின் அறிவுறுத்தலின் காரணமாக தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு  தற்போது வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.இந்நிலையில், மாநில அரசின்  சார்பில் தனியார் மற்றும் அரசின் உதவி பெறுகிற தனியார் நிறுவனங்களில்  வேலைவாய்ப்பில் 80 சதவீதம்  கன்னடர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அரசின் சார்பில்  சலுகைகள் வழங்கப்படுகின்றன. மாநிலத்தில் தொழில் தொடங்கப்பட்டால், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதே அதற்கு காரணமாகும். அதே  நேரம் சில தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைகள்  வழங்கப்படுவதில்லை. அதற்கு காரணம் கேட்டால், ஆங்கிலம் தெரியவில்லை, திறன்  இல்லை என்று பதில் கூறுகின்றனர்.  இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில்  மாநில அரசின் சார்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக  தனியார் மற்றும் அரசு உதவி பெறுகிற தனியார் நிறுவனங்களில் உள்ளூர்  மக்களுக்கு (கன்னடர்கள்)  வேலைவாய்ப்பில் 80 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட  வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் மட்டுமே அந்நிறுவனத்திற்கு மாநில அரசின்  சலுகைகள் கிடைக்கும். அரசின் உத்தரவின்படி வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை  எனில், அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வருகிற சலுகைகள் அனைத்தும் வாபஸ்  பெறப்படும். ஒருவேளை, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான தகுதிகள்  உள்ளூர் மக்களிடம் இல்லை என்றால் அதை பற்றிய விபரங்களை அரசுக்கு  அந்நிறுவனம் வழங்கவேண்டும். தனியார் நிறுவனத்தின் கடிதத்தை அரசு பரிசீலனை  நடத்தி பதில் உத்தரவு பிறப்பித்த பிறகு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு  வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.இதுபோன்ற சட்டம் தமிழகத்தில் இல்லாததால், வெளிமாநிலத்தினர் எளிதாக எல்லாத்துறைகளிலும் ஆக்ரமித்து வருகின்றனர். தமிழகத்திலும் இதுபோன்ற சட்டம் கொண்டு வரப்படுமா என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

யார் யார் உள்ளூர் மக்கள்...?

கர்நாடக  மாநிலத்தில் 10 வருடமாக வசிப்பவர்களை உள்ளூர்காரர் என  பாவித்து கொள்ளலாம் என்பது அரசின் முடிவாகும். கன்னட சங்கத்தினர் இதற்கு  எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னட சங்கத்தினரின் எதிர்ப்பை தொடர்ந்து  மாநிலத்தில் 15 வருடம் மற்றும் அதற்கு மேல் வசிக்கும் அனைவரும்  உள்ளூர்காரர்கள் (கன்னடர்கள்) என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: