மாநகராட்சி 4வது மண்டலத்தில் துப்புரவு பணிகள் சுணக்கம்: நோய் பாதிப்பில் பொதுமக்கள்

பெரம்பூர்: சென்னையில் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே டெங்கு காய்ச்சலால் சென்னை மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வடசென்னை பகுதியில் அதன் தீவிரம் அதிகமாகவே காணப்பட்டது.  சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளான கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர், பெரம்பூர் ஆகிய பகுதி மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பெரம்பூரை சேர்ந்த  சிறுமி  ஜெனோபா லில்லி,  வியாசர்பாடியை சேர்ந்த சாய் தர்ஷன், கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த கனிஷ்கா மற்றும் சக்திவேல் ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கு காரணம் குடியிருப்பு பகுதியில் குப்பை குவியல், கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேக்கம், கொசு தொல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். ஆனாலும், மாநகராட்சி சுகாதாரத்துறை இதுவரை மேற்கண்ட பகுதிகளில் சரிவர துப்புரவு பணிகளை செய்யாமல் மெத்தனப்போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.  

 குறிப்பாக, வியாசர்பாடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் தினசரி குப்பையை அகற்றாததால், ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீதிகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இவற்றில் இருந்து கொசு உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.இதேபோல், 35வது வார்டுக்கு உட்பட்ட சினனாண்டி மடம்,  கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் குப்பை அகற்றப்படாமல் மலை போல் குவிந்துள்ளன. முத்தமிழ் நகர் வடக்கு நிழற்சாலை பகுதியில் கொடுங்கையூர் கால்வாய் உள்ளது. அதில் இருந்து அகற்றப்பட்ட குப்பை மற்றும் கழிவுகள் பல நாட்களாக சாலையிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது.  4வது மண்டலத்தில்  பல்வேறு பகுதிகளில் இதுபோல் குப்பை குவியல் மற்றும்  கழிவுநீரால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து துப்புரவு பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>