×

மெட்ரோ நிர்வாகம் மெத்தனத்தால் ஜிஎஸ்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் குடிநீர்: போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள ‘‘மெப்ஸ்’’ வளாகம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து  ஓடுகிறது. இதனால், சாலையில் சேதம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறியுள்ளது.அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஓடும் தண்ணீரில் வழுக்கி விழும் அபாயம் ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில்  இருதரப்பினர் இடையே புகார் அளித்தும் அவர்கள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர் என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  ‘‘சானடோரியம் ஜிஎஸ்டி சாலையை தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன. எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இச்சாலையில், மெட்ரோ நிர்வாகத்தின் குடிநீர் குழாயில்  அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியாகி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனை மெட்ரோ நிர்வாகம் சரியாக சரி செய்யாமல் ஏனோதானோ என மாதத்திற்கு ஒருமுறை சரி செய்வதால் மீண்டும், மீண்டும் அங்கு உடைப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகத்திடம் கேட்டால் உடைந்த  குழாயை நாங்கள் சரி செய்கிறோம். ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை அதன் மீது சாலையை முறையாக போடாததால் வாகனங்கள் செல்லும்போது குழாய் சேதமடைந்து அதில் உடைப்பு ஏற்படுகிறது.

எனவே மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை ஒழுங்காக போட்டால் மட்டுமே குழாயில் மீண்டும் உடைப்புகள் ஏற்படாது’’ என தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் சாலையை சீரமைக்க எந்த ஒரு முறையான பதிலையும் கூறாமல் இருக்கின்றனர். அதே போல சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து  பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேல் சாலை சேதமடைந்து உள்ளது. இதனை மாநில நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க முன்வராததால் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் சார்பில் அவ்வப்போது மண் கொட்டி  சீரமைத்து வருகின்றனர்.ஆனாலும் அவ்வழியாக பேருந்துகள் செல்ல முடியாமல் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் வழியாகவே பேருந்துகள் வெளியேறி வருகிறது.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : GST Road ,Metro Administration GST road , Drinking, water ,GST, road
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம்...