மின் இழப்புகளை தவிர்க்க நவீன இன்சுலேட்டர் கருவி: தமிழக மின்சாரவாரியம் திட்டம்

சென்னை: மின்இழப்புகளை தவிர்க்கும் வகையில், மின்கம்பங்களில் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இன்சுலேட்டர் கருவிகளை பொருத்த தமிழக மின்சாரவாரியம்  திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவ்வாறுள்ள இணைப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை, அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு ஆங்காங்குள்ள துணை  மின்நிலையங்களுக்கு கொண்டுவரப்படும்.இங்கிருந்து வீடு உள்ளிட்ட இன்னபிற இடங்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதற்காக அதிகமான இடங்களில் கம்பங்கள் நடப்பட்டுள்ளன. இந்தமுறையில் மின்விநியோகம் செய்யப்படுவதால், வாரியத்திற்கு மின்இழப்பு ஏற்படுவதாக  கூறப்படுகிறது. இதேபோல் பகிர்மான மின் தடங்கள் மிக நீளமாக இருப்பது; மின் தடங்களில் போதுமான கடத்திகள் இல்லாதது; பகிர்மானம் செய்யப்படும் இடத்திலிருந்து, மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் நீண்ட தொலைவில் அமைந்திருப்பது; குறைந்த  அழுத்தம் கொண்ட மின்சாரம் பாய்வது; டிரான்ஸ்பார்மரின் செயல்திறன் குறைந்திருப்பது போன்றவையும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற பிரச்னைகளில் காரணமாக, தமிழகத்தில் மொத்த மின்விநியோகத்தில், 13-15 சதவீதம் அளவுக்கு மின் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வாரியத்திற்கு தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. எனவே இதைத்தடுப்பதற்கான  பணியில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்ஒருபகுதியாக, நவீன இன்சுலேட்டர் கருவிகளை வாங்கி, மின்கம்பங்களில் பொருத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்விநியோகத்தில் இன்சுலேட்டர் கருவி முக்கியமான பங்கு வகிக்கிறது. பெரும்பாலன இடங்களில் பீங்கானால் தயாரிக்கப்பட்ட இன்சுலேட்டர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கருவியால் மின்இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்  உள்ளன.   

அதாவது மழைகாலத்தின் போது, சில நாட்களுக்கு மழை தொடர்ந்து நீடிக்கும். அப்போது மின்கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இன்சுலேட்டர் கருவி நணைந்து ஓட்டையாகிவிடும். இதனால் மின்இழப்பு மற்றும் பழுது ஏற்படக்கூடும்.  இதைத்தடுக்கும் வகையில் தற்போது நவீன முறையில் தயாரிக்கப்பட்ட இன்சுலேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மழையில் நணைந்தாலும் எளிதில் பாதிப்பு ஏற்படாது. எனவே இதை பல்வேறு இடங்களில் பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதற்காக சுமார் 7,500 நவீன இன்சுலேட்டர் கருவிகளை வாங்க முடிவு  செய்துள்ளோம். இதற்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.  
Tags : avoid power, losses, Equipment,Project
× RELATED எட்டு வழிசாலை வழக்கில் மத்திய அரசின்...