×

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 1 கட்டணத்தில் இ-பைக் சேவை

சென்னை: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்துக்கு 1 கட்டணத்தில் இ-பைக் சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வாகன சேவை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, குறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவை, ஷேர் ஆட்டோ, டாக்சி சேவையை  அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முற்றிலும் மின்சாரத்திலேயே இயங்கும் வகையினாலான இ-பைக் சேவையை கிண்டி, ஆலந்தூர், வடபழனி மற்றும் அண்ணாநகர் ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்களில்  நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. வோகோ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இதில் 1 கி.மீ தூரத்துக்கு ₹4 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ‘fly’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்துக்கு ₹1 கட்டணத்தில் இ-பைக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இருசக்கர வாகனம் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கக்கூடியது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குறிப்பிட்ட வழித்தடத்தில் இச்சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுல் பிளே ஸ்டோரில் ‘fly’ செயலியை  பதிவிறக்கம் செய்து, இச்சேவையை பயணிகள் பெறலாம். எந்தெந்த இடங்களில் பார்க்கிங் மற்றும் கட்டண விவரங்களை முழுமையாக இந்த செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். முதல்கட்டமாக ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 6 இ-பைக்குகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதை 15 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொண்டு பல மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும்  மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


Tags : Alandur Metro Station , E-Bike, Alandur Metro, Station 1
× RELATED ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில்...