மேம்பால பணிக்காக 2007ம் ஆண்டு மூடப்பட்ட அண்ணாநகர், பாடி ரயில் நிலையங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்படுமா?

* பாழாகி வரும் உபகரணங்கள் * குடிமகன்கள் கூடாரமானது

சென்னை: மேம்பால பணிக்காக மூடப்பட்ட அண்ணாநகர், பாடி ரயில் நிலையங்கள், பணி முடிந்து 11 ஆண்டாகியும் மீண்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் உபகரணங்கள் பாழாகி வருவதுடன், குடிமகன்களின் கூடாரமாக  மாறியுள்ளது. எனவே, இப்பகுதி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நலன்கருதி இந்த ரயில் நிலையங்களை சீரமைத்து மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து அண்ணாநகர் ரயில் நிலையம் வரை, கடந்த 2003ம் ஆண்டு முதல், ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதற்காக, வில்லிவாக்கத்தில் இருந்து பாடி, அண்ணாநகர் மேற்கு வரை ரயில் பாதை  புதுப்பிக்கப்பட்டது. மேலும், குடிநீர், மின்விளக்கு, கழிவறை, டிக்கெட் கவுன்டர், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.இந்த ரயில் சேவையை பாடி, அண்ணாநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வந்தனர். மேலும், பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்  செல்வதற்கு அண்ணாநகர் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். பாடி, முகப்பேர் பகுதிகளை சுற்றியும் பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வருவோர் பாடி ரயில் நிலையம் வந்து, மேற்கண்ட நிறுவனங்களுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2007ம் ஆண்டு பாடி ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கு தூண்கள் அமைப்பதற்கு வசதியாக, பாடி மற்றும் அண்ணாநகர் ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த தடத்தில்  ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. ஆனால், மேம்பாலப்பணி முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இதுவரை இந்த வழித்தடத்தில் ரயில் சேவை மீட்டும் துவங்கப்படவில்லை. இதனால் மூடப்பட்ட அந்த 2 ரயில் நிலையங்களிலும்  தற்போது, போதை ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ரயில் நிலையங்களில் இருந்த இருக்கைகள், மேற்கூரைகள் உடைந்துள்ளன. கழிவுறையும் பாழாகிவிட்டது. அண்ணாநகர் மற்றும் பாடி பகுதிகளில் இருந்து சென்னை கடற்கரை பகுதிக்கு பேருந்துகளில் பயணிப்பதால்  நெரிசல் மற்றும் காலதாமதம் ஏற்படுவதால், தினசரி பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பாடி, அண்ணாநகர் ரயில் நிலையங்களை சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அண்ணாநகர், பாடி பகுதியில் இயங்கி வந்த ரயில் நிலையங்கள் கொளத்தூர், வில்லிவாக்கத்தின் ஒரு பகுதி மற்றும் அண்ணாநகர் மேற்கு பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.  இதற்கிடையே பாடியில் நடைபெற்ற மேம்பாலப் பணிக்காக இந்த ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ஆனால், மேம்பால பணி முடிந்து பல ஆண்டாகியும் இதுவரை இந்த ரயில் நிலையங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், இந்த ரயில் நிலையங்கள் குடிமகன்களின் கூடாரமாகவும், சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாகவும் மாறியுள்ளது. எனவே, இந்த 2 ரயில் நிலையங்களையும் சீரமைத்து, இத்தடத்தில் மீண்டும் ரயில் சேவைய தொடங்க  வேண்டும். இதனால் கொளத்தூர், ஐசிஎப், வில்லிவாக்கம், அண்ணாநகர் பகுதி மக்கள் பயன்பெறுவர்கள். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் பாடி  ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. பாடி ரயில் நிலையத்தை திருமங்கலம் வரை நீட்டித்தால் மெட்ரோ இணைப்பு  கிடைக்கும். அதனால் கோயம்பேடு  மார்க்கெட் போன்ற பகுதிகளுக்கு சென்று வர  வசதியாக இருக்கும். எனவே அண்ணாநகர், பாடி ரயில் நிலையங்களை விரைந்து சீரமைத்து, ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: