திருப்பதியில் லட்டு தயாரிக்கும் மையத்தில் திடீர் தீ

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்யக்கூடிய மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தினந்தோறும் 4 லட்சம் லட்டுகள் தயார் செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  லட்டு தயாரிப்பதற்காக கோயிலுக்கு வெளியே மையம் அமைக்கப்பட்டு, அங்கு 40 அடுப்புகள் மூலம் பூந்தி தயாரிக்கப்பட்டு கோயிலுக்கு கன்வேயர் பெல்ட் மூலமாக அனுப்பி பின்னர் லட்டு தயார் செய்து கோயிலுக்கு வெளியே  கொண்டு  வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை லட்டு தயார்  செய்வதற்காக பூந்தி தயாரிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. அப்போது திடீரென பூந்தி தயாரிக்கக்கூடிய அடுப்பின் அருகில் உள்ள சுவற்றிலும் புகை செல்லக்கூடிய கூம்பு  குழாயில் படிந்துள்ள நெய் திட்டுக்களில் தீப்பிடித்துக் கொண்டது.

இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். பூந்தி தயாரிக்கும் மையத்தில் இருந்து கரும் புகையுடன்  நெருப்பு வெளியேறியதை அடுத்து அங்கிருந்த பக்தர்கள் ஏழுமலையான் கோயில் அருகே என்ன  நடந்தது என்று தெரியாத நிலையில் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு கொண்டு வரப்பட்ட 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்களும், தேவஸ்தான ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

தொடர்ந்து லட்டு தயாரிக்கும் பணி 24 மணி நேரமும் நடைபெற்று வருவதால் நெய் திட்டுகள் படிந்து விடுகிறது.  இந்த நெய் திட்டுகளை அகற்றுவதற்கு மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் அவ்வாறு சுத்தம் செய்யக்கூடிய பணியில் அலட்சியமாக இருப்பதே இதுபோன்ற   தீ விபத்திற்கு  காரணம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: