துமகூருவில் இருந்து சென்னைக்கு லாரியில் அனுப்பிய வெங்காயம் நூதன முறையில் கொள்ளை: 5 பேர் கைது

துமகூரு: விபத்து ஏற்பட்டதில் லாரி கவிழ்ந்து பொதுமக்கள் வெங்காயத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாக நாடகமாடிய 5 பேரை கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட 10 டன்  வெங்காயத்தை பறிமுதல் செய்தனர். நாட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் பல இடங்களில் வெங்காயம் கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதை காண முடிகிறது. ஒரு கட்டத்தில் தங்கத்தை பாதுகாக்கிறார்களோ இல்லையோ  வெங்காயத்தை பாதுகாப்பதில் மக்கள் தவறுவதில்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.விளைநிலத்தில் வெங்காயம் திருடப்படுவதும், லாரிகளை வழிமறித்து திருடப்படுவதும், குடோன்களில் திருடப்படுவதுமாக உள்ளது.இந்நிலையில், கர்நாடகாவில் வினோத முறையில் வெங்காயம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு மாவட்டம், ஹிரியூரைச் சேர்ந்தவர் அனந்த்குமார். வெங்காய வியாபாரியான இவர் 173  கோணிப்பைகளில் நிரப்பப்பட்ட 10 டன் எடை கொண்ட வெங்காயத்தை செல்லகெரேவில் இயங்கிவரும் பி.கே.டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான லாரியில் ஏற்றி சென்னைக்கு அனுப்பியுள்ளார்.இந்த லாரியை சந்தோஷ்குமார் என்பவர் ஓட்டினார். உடன் கிளீனர் சேத்தன் சென்றார். இருவரும் சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றனர். அன்றிரவு சுமார் 12 மணி அளவில், வெங்காய லாரி தேசிய நெடுஞ்சாலை எண்  48ல் தாவரகெரே போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட யரகுண்டீஷ்வரா என்ற கிராமம் அருகே சென்றுக் கொண்டிருந்தபோது லாரி விபத்துக்குள்ளானதாகவும், இதில் டிரைவர் சந்தோஷ்குமார் மற்றும் கிளீனர் சேத்தன் ஆகிய இருவரும் காயம்  அடைந்ததாகவும் கூறி ஷிரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

லாரி விபத்து குறித்து தகவல் அறிந்த தாவரகெரே போலீசார் மருத்துவமனைக்கு வந்து டிரைவர் சந்தோஷ்குமார் மற்றும் கிளீனர் சேத்தன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பின்னர்,  தாவரகெரே போலீசார் விபத்து நிகழ்ந்ததாக கூறிய இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.ஆனால், அங்கு விபத்து நிகழ்ந்து வெங்காய மூட்டைகள் கீழே விழுந்ததற்கான எந்த அடையாளமும் தென்படவில்லை. இதன் இடையே லாரி விபத்துக்குள்ளானது குறித்தும், லாரியில் இருந்த வெங்காயத்தை பொதுமக்கள் கொள்ளை அடித்து  சென்றது குறித்தும் டிரைவர் சந்தோஷ்குமார் வெங்காய வியாபாரி அனந்த்குமாருக்கு தகவல் கொடுத்தார்.தாவரகெரே போலீஸ் நிலையத்திற்கு சென்ற அனந்த்குமார் லாரி விபத்துக்குள்ளாகி அதிலிருந்த வெங்காயம் கொள்ளை போனது குறித்து போலீசில் புகார் அளித்தார். ஏற்கனவே, வெங்காயம் கொள்ளை போனது குறித்து தாவகெரே  போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து உண்மையை கண்டறிய போலீஸ் டி.எஸ்.பி. குமாரப்பா தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸ் எஸ்.பி. கோணாவம்ஷி கிருஷ்ணா உத்தரவிட்டார்.

இந்த தனிப்படை போலீசார் லாரி டிரைவர் சந்தோஷ்குமார் மற்றும் கிளீனர் சேத்தனை அழைத்து வந்து தனித்தனியே வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது,ஹிரியூரில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் வெங்காய வியாபாரி அனந்த்குமார் அனுப்பி வைத்தார். அப்ேபாது, லாரி டிரைவர் சந்தோஷ்குமார் லாரியை ஹிரியூரு அருகே கோரடுகு என்ற கிராமத்தில் 92 மூட்டைகளை இறக்கியுள்ளார்.  மீதமிருந்த 81 மூட்டைகளை வேறு ஒரு லாரியில் ஏற்றி, அதை பெங்களூரு, யஷ்வந்தபுரத்தில் உள்ள ஏ.பி.எம்.சி. யார்டுக்கு  அனுப்பி வைத்துளள்னர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வெங்காய மூட்டைகளுடன் லாரியை பறிமுதல்  செய்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஹிரியூரை சேர்ந்த ஷேக் அலிகான்(58) மற்றும் இவரின் பிள்ளைகளான புடேன் சாப்(36), தாதாபீர்(32), லாரி டிரைவர் சந்தோஷ்குமார்(40) மற்றும் கிளீனர்(26) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார்  ஒட்டுமொத்த வெங்காயத்தையும் பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வெங்காயத்திற்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து எனக்கூறி லாரியில் விற்பனைக்கென அனுப்பிவைத்த வெங்காய மூட்டைகளை விற்று விட்டு விபத்து ஏற்பட்டு கொள்ளை போனதாக கூறி நாடகமாடிய சம்பவம்  துமகூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: