புதுடெல்லி: வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஜியோ வருகையால் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்தன. அதிகபட்சமாக வோடபோன் ஐடியா நிறுவனம் ₹50,000 கோடிக்கு மேல் நஷ்டம் அடைந்ததாக அறிவித்தது. இந்நிலையில், நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பேக்கேஜ் கட்டணங்களை 42 சதவீதம் வரை உயர்த்தின. இது கடந்த 3ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதோடு, வேறு நெட்வொர்க்கிற்கு அதிகபட்சமாக 3000 நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவித்தன. கட்டணமும் உயர்ந்து பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடு விதித்ததால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.