பல் பிடுங்கப்பட்ட அமைச்சர்கள் பிரதமர் அலுவலக ஆதிக்கத்தால் ஆபத்து: பொருளாதார சரிவு பற்றி ரகுராம் ராஜன் பகீர் தகவல்

புதுடெல்லி: அமைச்சர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு, பிரதமர் அலுவலத்தில் ஒட்டுமொத்த அதிகார குவிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், தற்போதைய பொருளாதார மந்தநிலை மற்றும் எதிர்கால ஆபத்து குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரம் மிக மந்தமாக உள்ளது. இதைப்புரிந்து கொள்ள வேண்டுமானால், எங்கே தவறு என்பதை கண்டுபிடிக்க மத்திய அரசின் அதிகார குவிப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும். பிரதமர் அலுவலகம்தான் ஒட்டுமொத்த அதிகார மையமாக செயல்படுகிறது. வெறும் முடிவுகள் எடுப்பது மட்டுமல்ல... யோசனைகள், திட்டங்கள், அதன் வழிமுறைகள் என எல்லாமே பிரதமரை சுற்றியுள்ள சிலராலும், பிரதமர் அலுவலகத்தாலும்தான் எடுக்கப்படுகின்றன. இப்படி இருப்பது கட்சி முடிவுகளை எடுப்பதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், இவர்களின் நிபுணத்துவம் பொருளாதார சீரமைப்புகளுக்கு உதவாது; பலன் தராது. முந்தைய அரசுகள், பொருளாதார தாராளமயமாக்கலை தொடர்ந்து மேற்கொண்டு வந்தன. ஒருங்கிணைந்த தொலைநோக்கு பார்வை இன்றி அதீதமாக அதிகாரத்தை ஒரே இடத்தில் மையப்படுத்தி பிரதமர் அலுவலகம் செயல்படுவது சிக்கல்களைத்தான் ஏற்படுத்தும்.

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்பதை தாரக மந்திரமாக கூறித்தான் மோடி அரசு பதவிக்கு வந்தது. ஆனால், இது பல நேரங்களில் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. மக்களையும் தனியார் துறையினரையும் சுதந்திரமாக செயல்பட அரசு விடுவதில்லை. பொருளாதாரம் சரிகிறது என்பதை புரிந்து கொள்வதுதான், பிரச்னையை அறிந்து கொள்வதற்கான தொடக்கப்புள்ளி. அதைவிடுத்து, ஒவ்வொரு விமர்சனத்தையும் அரசியல் ரீதியானது என்று கூறக்கூடாது. மேலும், இந்த பிரச்னை தற்காலிகமானதுதான் என நம்புவதை விட்டுவிட வேண்டும். எதிரான சர்வே முடிவுகள், செய்திகளை வெளிவரவிடாமல் அடக்குவது என்பதையும், தானாக சரியாகி விடும் என கருதுவதை நிறுத்த வேண்டும். கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறை, உள்கட்டமைப்பு துறைகள் மற்றும் இவற்றுக்கு கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மிகுந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் வராக்கடன்கள் அதிகரிக்கும் சூழல் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு, இளைஞர்களிடையே மிகுந்த மன அழுத்தத்தை உண்டாக்கும். உள்நாட்டு தொழில்களில் முதலீடு தேக்கம் அடைந்து விட்டது. இதனால் ஏதோ மிக மோசமான ஆபத்து நிகழப்போகிறது. என்பதை காட்டும் அறிகுறியாக இது உள்ளது.  மத்திய அரசு நிதியை, தேசிய வேலை உறுதி திட்டம் போன்ற ஊரக ஏழைகளுக்கான திட்டங்களுக்கு நிதி அளித்து உதவ வேண்டும். மோடி அரசு ஐந்தரை ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்தும், இன்னும் சில பிரச்னைகள் நீடிக்கிறது. இதை தீர்க்க மிகப்பெரிய மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கைகள் அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொருளாதாரம் சரிகிறது என்பதை புரிந்து கொள்வதுதான், பிரச்னையை அறிந்து  கொள்வதற்கான தொடக்கப்புள்ளி. அதைவிடுத்து, ஒவ்வொரு விமர்சனத்தையும் அரசியல்  ரீதியானது என்று கூறக்கூடாது.

Related Stories:

>