×

27 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் வேட்பு மனுதாக்கல் இன்று ஆரம்பம்: 16ம் தேதி கடைசி நாள்

சென்னை:  ஊரக அமைப்புகளில் உள்ளாட்சி தேர்தலுக்காகன வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பார்கள் 16ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதே நேரம் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறைக்கு பிறகு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இந்த நிலையில், இரண்டு கட்டங்களுக்கும் வேட்புமனுதாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களின் வேட்புமனுக்களை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கல்வித்தகுதி, சொத்து விவரம், குற்றவியல் வழக்குகளின் விவரங்கள் தொடர்பான உறுதி ஆவணத்தை வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சான்றுரை மட்டும் அளித்தால் போதும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சின்னம் குறித்த படிவங்களை வேட்புமனு திரும்பப்பெறும் நாளன்று 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காவிடில் அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வைப்பு தொகையாக ரூ.200ம், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000 வைப்பு தொகை செலுத்த வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய 16ம் தேதி கடைசி நாள் ஆகும். 17ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 19ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நீதி கேட்டு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து இன்று அல்லது நாளை மறுநாள் திமுக சார்பில் இது தொடர்பாக நீதிமன்றத்ைத அணுக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்
வேட்பாளர்கள் கிராம ஊராட்சி உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களில் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும். ஒன்றிற்கும் மேற்பட்ட பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்தால் அவற்றை குறித்த நாளுக்குள் திரும்பப் பெற வேண்டும். தவறும்பட்சத்தில் குலுக்கல் முறையில் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் நிர்ணயித்து மற்ற மனுக்கள்  தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்படும்.

3.77 லட்சம் வேட்பாளர் கையேடுகள்
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான திருத்தப்பட்ட வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இத்தேர்தலுக்காக 3 லட்சத்து 77 ஆயிரத்து 500 வேட்பாளர் கையேடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்காக 7 லட்சத்து 49 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Appointment ,panchayat elections ,districts , Appointment,panchayat elections ,27 districts begins today, 16th
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனச்...