×

ரூ.2 ஆயிரம் கோடி பிட்காயின் மோசடி விவகாரம் தலைமறைவான பெண் வாட்ஸ்அப் ஆடியோ வெளியீடு

கோபி:  பிட்காயின் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள சுவேதா, வாட்ஸ்அப் மூலம் முதலீட்டாளர்களுக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் இந்தியா முழுவதும் பணம் வசூலித்து ₹2 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக உடுமலை ராஜதுரை, இவரது மனைவி சுவேதா உட்பட 5 பேர் மீது பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு மாவட்டம் கோபி போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தனர்.  மோசடி விவகாரத்தில் தலைமறைவாக உள்ள சுவேதா வாட்ஸ்அப் ஆடியோ வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் பேசியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம்... நான் ராஜதுரை மனைவி சுவேதா பேசுகிறேன். இப்போ நா சேப்டியான இடத்துல இருக்கேன். எனக்கு நிறைய பிரச்னைகள் இருக்கு. அவருக்கும் (ராஜதுரை) பிசினசில் நிறைய பிரச்னை இருந்துச்சு. நீ சேப்டியா இருனு என்கிட்டே சொல்லிட்டு வேற இடத்துல இருந்தார்.

கடந்த நாலு நாள் முன்னாடி வரை என்கிட்டே பேசிகிட்டு இருந்தவரு இப்போ அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப்-ல இருக்கு. ஞாயிற்றுக்கிழமைக்குள் எல்லா பிரச்னையையும் சால்வ் பண்ணிடுவேன்னு சொன்னாரு. அதுதான் அவர் என்கிட்டே கடைசியா பேசுனது.  மேலும் ரமேஷ், குட்டிமணி, ரவிராஜா, சுபாஷ்சாமிநாதன் எல்லோரும் போன் மூலமாக இங்கே வாங்க பேசிக்கலாம் என கூப்பிட்டாங்க. எனக்கு பிசினஸ் பத்தி எதுவும் தெரியாது. அதனால் எதுக்கு நான் வரனும் என கேட்டேன். நீங்க வரலைனா பெரிய பிரச்னை ஆயிடும் அதனால் வந்தாகனும் என சொன்னாங்க. அப்படி நீங்க வரவில்லை என்றால் ராஜா சாரை நீங்க பார்க்க முடியாதுனு சொன்னாங்க. அதற்கு நான் நீங்க என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கங்க, உங்க இஷ்டத்துக்கு வரமுடியாது என சொல்லிட்டேன். வரலைனா மீடியாவுல சொல்லுவோம்னு சொன்னாங்க. என்ன பிரச்னை வந்தாலும் நானும் எனது கணவரும் பாத்துக்கிறோம். எல்லோரும் சேர்ந்துதானே பிசினஸ் பண்ணினீங்க.

இப்போ அவரை மட்டும் சொல்றது எந்த விதத்தில் நியாயம்னு கேட்டேன். அதன்பின்னர், நான்தான் எல்லா பிசினஸ் பண்ணின மாதிரி கிரியேட் பண்ணி மீடியாவுல கொடுத்து இருக்காங்க. ஆனா எனக்கும் இந்த பிசினசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  இப்போ அவரு எங்க இருக்காருனு தெரியலை. இவங்க அவரை கொண்டு போயி வச்சிருக்காங்களா? அவர் மேல பழியை போட்டுட்டு அவருக்கு ஏதாவது பிரச்னை பண்ணலாமுன்னு நெனைக்கறாங்களா? இல்லை என்ன பண்ண போறாங்க என தெரியலை? நீங்க எல்லோரும் கூட இருந்து சப்போர்ட் பண்ணுங்க.இவ்வாறு சுவேதா பேசியுள்ளார்.தலைமறைவாக  உள்ள சுவேதா, அவரது கணவர் ராஜதுரை உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Bitcoin,fraud,case, Rs.
× RELATED நில மோசடி வழக்கில் மன்னர் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆஜர்