×

‘தமிழ் அழிந்து கொண்டு இருக்கிறது’: ராமதாஸ் வேதனை

புதுச்சேரி: ‘‘தமிழ்நாட்டில் தமிழ் அழிந்து கொண்டு வருகிறது’’ என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் - சரஸ்வதி ராமதாஸின் முத்து விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில், ராமதாஸ் பேசியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி மக்கள் சீறோடும் சிறப்போடும் வாழ்ந்தாலேயே போதும். அதுமட்டும்தான் என்னுடைய எதிர்பார்ப்பு. நம்முடைய மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று நாம் பெயர் வைத்திருக்கிறோம். கடந்த 6ம் தேதி சென்னையிலிருந்து தைலாபுரத்திற்கு வந்தபோது வழி நெடுகிலும் இருந்த கடைகளின் விளம்பர பலகையை பார்த்தேன். ஒரு இடத்தில்கூட தமிழில் விளம்பர பலகை இல்லை. ஒவ்வொரு ஆண்டாக கூறி வருகிறேன். தமிழ், தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ் பேசுகிறார்கள். ஆனால், அரைகுறையாக ஆங்கிலமும், பிற மொழி கலந்தும் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை என்று நான் வாதிடுகிறேன். மற்றவர்கள் தமிழ் இருக்கிறது என்று வாதிடட்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கிறேன் என்று ஓராண்டாக கூறி வருகிறேன். என்னோடு வாதிட யாரும் முன்வரவில்லை. இனி மேலாவது யாராவது முன்வந்தால் அந்த நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்பட வேண்டும் என விரும்புகின்றேன்.

 நாம் வாழ்கின்ற நாடு தமிழ்நாடு. ஆனால், இங்கு தமிழ்தான் இல்லை. இங்கிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து சென்றவர்களுக்கு அவ்வளவு தமிழ் உணர்வு உள்ளது. ஆனால், இங்கே தமிழ் அழிந்து கொண்டு இருக்கிறது. என்னுடைய ஆசையெல்லாம், நம்முடைய தாய்மொழி தமிழ் வளரவேண்டும். எங்கும் வளர வேண்டும், எல்லா நிலையிலும் வளர வேண்டும். நீங்கள் நினைப்பதுபோல் எனக்கு 80 வயது இல்லை. அதனால் இன்னும் 20 ஆண்டுகள் தமிழ் மக்களுக்காக உழைப்பேன். அந்த உணர்வு எனக்கு உள்ளது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Tags : Tamil , ruins
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...