மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி கூலி தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் தகவல்

திருச்சி: ‘மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி கூலி தொழிலாளர்களின் வருமானம் பாதித்துள்ளது’ என்று ப.சிதம்பரம் கூறினார்.திருச்சி விமான நிலையத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி: இந்தியாவுக்கு வரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதா, ஏற்றுக்கொள்வதில்லையா? அவர்களுக்கு எந்த வகையான நிபந்தனைகளை வரையறை செய்வது போன்றவற்றுக்கு தனிச்சட்டம் தேவை. ஆனால் தற்போது இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் மத அடிப்படையிலான பாகுபாடு நிலவுகிறது. இது குறித்து காங்கிரஸ் தலைமை இறுதி முடிவு எடுக்கும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி அன்றாட கூலி தொழிலாளர்களின் வருமானம் பாதியாகி விட்டது. கூலித்தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் பாதித்துள்ளனர். இதனால் நுகர்வு என்பது 24 சதவீதம் குறைந்துள்ளது. வாங்கும் சக்தியை மக்கள் இழந்ததால் உற்பத்தியும் குறைந்து விட்டது. மத்திய அரசு திறமையற்ற நிர்வாகம் செய்கிறது என்று உலக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். இதை நாளுக்கு நாள் மத்திய அரசு நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிழை இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொகுதி வரையறை, இட ஒதுக்கீடு போன்றவற்றில் குறைபாடுகள் இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தொடர்பாக தி.மு.க. மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மாநில தலைவர் முடிவெடுத்து அறிவிப்பார். தமிழகத்தில், 2021ல் என்ன அதிசயம் நடக்கும் என்பதை ரஜினிதான் கூறவேண்டும்.  இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். தடுமாறி சாய்ந்த சிதம்பரம்: விமான நிலையத்தில் முன்னதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி,  மெய்யநாதன் மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள்  ப.சிதம்பரத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் சிதம்பரம் தடுமாறி கீழே சாய்ந்தார். அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டனர்.

Related Stories: