×

மின்வாரியத்தில் ‘கேங்மேன்’ வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்: ரூ.3 லட்சம் வரை அதிகாரிகள் பேரம் பேசுவதாக இளைஞர்கள் வேதனை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மின்வாரிய அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டுகின்றனர். கேங்மேன் பணிக்கு அதிகாரிகள் ஆசியோடு ₹3 லட்சம் வரை பேரம்  பேசுவதால் தகுதியுடைய இளைஞர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் ‘கேங்மேன்’ (பயிற்சி) என்ற பதவிக்கான நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது. இதில், திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்துக்கு 3,076 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 11ம் தேதி வரை வெங்களாபுரத்தில் உள்ள 110 கி.வோ. திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் சரிபார்ப்பு பட்டியலுடன், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். வரும்போது, போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, கல்வி மாற்றுச்சான்றிதழ் அல்லது கடைசியாக படித்த கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுதாள் (ரெக்கார்டு ஷீட்), 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கொண்டு வர வேண்டும்.

மேலும், சாதிச்சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, முன்னுரிமை வகுப்பினர் பதிவு செய்திருந்தால் அதை கொண்டுவரலாம். பண்பு மற்றும் ஒழுக்கச்சான்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான பதிவு அட்டை ஆகியவைகளை  நகலுடன், அசல் சான்றிதழ்களை தவறாமல் கொண்டு, அனைத்துச் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு உடற்தகுதி தேர்வுகள் நடந்து வருகிறது. இந்த தகுதி தேர்வு வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மின்கம்பம் 20 அடி ஏறுதல், பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது உள்ளிட்ட பயிற்சிகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தோல்வி அடைகின்றனர். குறைந்த மதிப்பெண் பெறுபவர்களிடம் பணம்  பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கின்றனர் என்று உடல் தகுதி தேர்வுக்கு செல்லும் பயனாளிகள் கூறுகின்றனர்.

மேலும் திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும்  நபர் மூலம் ‘கேங்மேன்’ வேலை வாங்கி தருவதாக கூறி ₹3 லட்சம் வரை அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் அந்த நபர் தனக்கு அமைச்சர் வரை செல்வாக்கு உள்ளது. பணிகளை கண்டிப்பாக பெற்றுத் தருகிறோம் என இதுவரை பல கோடி ரூபாய் சுருட்டியதாக பரபரப்பாக பேசப்படுகிறது.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘எங்கள் துறையில் ஒரு சில கறுப்பு ஆடுகள் இதுபோன்ற பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் அரசு முழுக்க முழுக்க உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில்தான் அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்றனர்.

Tags : Millions ,money scammers ,Gangman , Millions , money scammers,claiming, Gangman's mobile job
× RELATED கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு...