விண்ணை முட்டிய விலை எதிரொலி கடலூரில் திருமண ஜோடிக்கு வெங்காய பொக்கே பரிசு

கடலூர்: விண்ணை முட்டிய வெங்காய விலை எதிரொலி காரணமாக கடலூர் திருமண விழாவில் திருமண ஜோடிக்கு நண்பர்கள் வெங்காய பொக்கேவை பரிசாக அளித்தது விழாவில் கலந்து கொண்டவர்களை வியப்புக்கு உள்ளாக்கியது. நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணை முட்டி வருவதால் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயம், சிறு உணவகம் முதல் பெரிய ஓட்டல்கள் வரை உணவு வகைகளில் குறைந்துவிட்டது. ஆம்லெட்டில் குறைந்த அளவு வெங்காயம் பயன்படுத்துவதும் சில இடங்களில் வெங்காயம் இல்லாமலும் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் மணமக்கள் சப்ரீனா-ஷாகுல்க்கு அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து வெங்காயத்தை பரிசாக அளித்தனர்.

வழக்கமாக திருமண விழாவில் பூச்செண்டு, பரிசுப் பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்படும் நிலையில் வெங்காயத்தின் கடுமையான விலை உயர்வால் அதிர்ந்து போய் உள்ள நாட்டு மக்களின் நிலையை எடுத்துரைக்கும் வகையில் கடலூர் திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காய பொக்கேவை பரிசாக வழங்கியதாக மணமக்களின் நண்பர்கள் தெரிவித்தனர். மேலும் சாதாரணமாக கிலோ ரூ.20க்கு கிடைத்து வந்த வெங்காயம், தற்போது மணமக்களுக்காக செய்யப்பட்ட பொக்கே ரூ.600 ஆகியது. எனவே இதுவும் விலை உயர்ந்த பரிசுப் பொருள் தான் என குறிப்பிட்டனர். இதனை திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள், திருமணத்துக்கு வருகை புரிந்தவர்கள் என அனைவரும் வியந்து பார்த்தனர். வெங்காயத்தின் தட்டுப்பாடு நீடித்தால் கடைசியில் வெங்காயத்தை இதுபோல் காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்க முடியும் என விழாவுக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

Tags : Onion Bokeh Gift For Wedding ,Cuddalore ,Cuddalore Onion Bokeh Gift For Wedding , Onion Bokeh,Gift , Wedding Couple,Cuddalore
× RELATED கடலூர் பெண்ணையாற்றில் ஆற்றுத்திருவிழா கோலாகலம்