அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே அதிகாலை தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம்- அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே ஊழியர்கள் நேற்று அதிகாலை தண்டவாள பராமரிப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது 4.25 மணியளவில் சித்தேரி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள் அன்வர்திகான்பேட்டை மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து அவ்வழியாக மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து வரும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து வந்த ரயில்வே ஊழியர்கள், விரிசலை  அரை மணி நேரம் போராடி சரி செய்தனர். இதன்பின், நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றது. ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். உரிய நேரத்தில் தண்டவாள விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் காவேரி எக்ஸ்பிரஸ் விபத்தில் இருந்து தப்பியது. தண்டவாள விரிசலுக்கான காரணம் குறித்து ரயில்வே ஊழியர்கள், போலீசார், பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: