திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் நாளை ஏற்றப்படுகிறது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8வது நாளான நேற்று காலையில், சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது.  உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சந்திரசேகரர் 3ம் பிரகாரத்தை வலம் வந்து திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் காலை ஒரு மணியளவில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து குதிரை வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது மாடவீதியில் திரளான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், நள்ளிரவு உற்சவத்திலும் குதிரை வாகனங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனங்களில் பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் மாடவீதியில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், நள்ளிரவு வரை வீதி உலா நடந்தது. விழாவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், விழாவின் 10ம் நாளான நாளை அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும். அதையொட்டி மகாதீபம் ஏற்றுவதற்காக தூய செம்பு உலோகத்தாலான தீபகொப்பரை நேற்று அண்ணாமலையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.அதேபோல், மகாதீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1000 மீட்டர் திரி (காடா துணி) கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், 3ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாளை காலை, தீப கொப்பரை தலை சுமையாக மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Related Stories: