அருண் ஷோரியிடம் மோடி நலம் விசாரித்தார்

புனே: புனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரியிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பாஜ முன்னாள் தலைவரான அருண் ஷோரி, கடந்த 1999-2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவரான ஷோரி, பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தவர். 78 வயதாகும் ஷோரி, கடந்த 1ம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்தார். இதில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக புனேயில் உள்ள ரூபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி, புனேவில் போலீஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும் வழியில் நேற்று மருத்துவமனைக்கு சென்று அருண் ஷோரியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

Related Stories: