வெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து முருங்கை, பீன்ஸ், கேரட், உருளை விலையும் உயர்ந்தது: பொதுமக்கள் கடும் பாதிப்பு

சென்னை: வெங்காயம் விலை உயர்வை தொடர்ந்து முருங்கை, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.  தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ேபான்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் வந்தது. மழையால் வரத்து அடியோடு குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது விலை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் பெரிய வெங்காயம் கிலோ ₹20, ₹30 என்று விற்கப்பட்டது. இது வரலாறு காணாத வகையில் உயர்ந்து ₹140ஆக இருக்கிறது. அதேபோல ₹30, ₹40க்கு விற்கப்பட்ட சின்ன  வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ₹150 வரை உயர்ந்துள்ளது.

இது மொத்த மார்க்கெட்டில் தான்.ஆனால், சில்லரை விற்பனையில் சின்ன வெங்காயம்(சாம்பார் வெங்காயம்) ₹220 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் ₹200 வரை விற்கப்படுகிறது. விலை உயர்வால் கிலோ கணக்கில் வாங்கி வந்தவர்கள் தங்கத்தை பார்த்து வாங்குவது போல பார்த்து பார்த்து வாங்க தொடங்கியுள்ளனர். விலை உயர்வை காரணம் காட்டி 2 கிலோ, 5 கிலோ என்று வாங்கி வந்தவர்கள் அரைகிலோ, கால் கிலோ, 100, 200 கிராம் என்று வாங்க தொடங்கியுள்ளனர். இந்த விலை ஏற்றத்தில் இருந்து மீள்வதற்குள் காய்கறி, மளிகை பொருட்களின் விலை உயர தொடங்கியுள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பீன்ஸ் ரு.40லிருந்து ₹50, கேரட் ₹50லிருந்து ₹60, உருளைக்கிழங்கு ₹25லிருந்து ₹30, புடலங்காய் ₹25லிருந்து ₹30, சேனைக்கிழங்கு ரூ30லிருந்து ₹35, ஆகவும் உயர்ந்துள்ளது. ₹20க்கு விற்கப்பட்ட தக்காளி விலை சில இடங்களில் ₹50 வரை விற்கப்படுகிறது. இந்த விலை மொத்த மார்க்கெட்டில் தான் சில்லரை விலையில் 25 சதவீதம் அளவுக்கு விலை அதிகமாக விற்கப்படுகிறது.அதே போல் ஒரு கிலோ முருங்கைக்காய் ₹20 முதல் ₹30 வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.  மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ₹350க்கு விற்கப்படுகிறது. இது சில்லரை விலையில் அதிகப்படியாக விற்கின்றனர். ஒரு முருங்கைக்காய் ₹40 முதல் ₹50 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவால் இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே போல மளிகை பொருட்களின் விலையும்  உயர தொடங்கியுள்ளது. அதாவது, உளுந்தம்பருப்பு ₹140, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கிலோ ₹100 தாண்டி விற்பனையாகிறது. இதே போல பல்வேறு மளிகை பொருட்களும் சிறிது உயர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் வெங்காயம், காய்கறிகள், மளிகை பொருட்கள் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களை நிலைகுலைய வைத்துள்ளது. இப்படியே சென்றால் சம்பாதிக்கும் சம்பளம் அனைத்தும் மளிகை, காய்கறிக்கே சரியாகிவிடும் நிலை தான் ஏற்படும் என்றும் பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Related Stories:

>