அரசாணை அமல்படுத்தாமல் 3 மாதங்களாக இழுத்தடிப்பு பழைய ஊதியத்தில் வாழ்க்கை நடத்த திணறும் கோயில் பணியாளர்கள்

* அகவிலைப்படியும் பெற முடியாமல் தவிப்பு

* திருக்கோயில் பணியாளர் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: அரசாணையை அமல்படுத்தாமல் 3 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் பழைய ஊதியத்தை வைத்து கோயில் பணியாளர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,120 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் அர்ச்சகர், ஓதுவார், எழுத்தர், உதவியாளர், காவலர், துப்புரவாளர் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் அரசு ஊழியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த அரசாணை அமல்படுத்துவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்காமல் 3 மாதங்களாக ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், கோயில் பணியாளர்கள் பழைய ஊதியம் தான் பெற்று வருகின்றனர். இதனால், அகவிலைப்படி 10 சதவீதம் வழங்க ஆணையர் அலுவலகத்தில் எவ்வித உத்தரவு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், அகவிலைப்படியை பெற முடியாமலும் குடும்பம் நடத்த முடியாமலும் பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், பல கோயில்களில் பணிச்சுமைஏற்பட்டு பணியாளர்கள் மிகுந்த மனஉளைச்சலில் பணிபுரியும் சூழல் உள்ளது.  இது குறித்து திருக்கோயில் பணியாளர் சங்கம் நிர்வாகிகள் கூறும் போது, ‘கோயில்களில் புதிய திட்டங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்காக கோயில் பணியாளர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்காமல், மிக குறைந்த தினக்கூலியில் பணியாளர்களை நியமனம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அத்தியாவசிய பணியாளர்களை பணி வரன்முறை செய்யாமல் உள்ள நிலையில் குறைந்த ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் பணியாளர்களுக்கான பதவி உயர்வு கடந்த 2016 முதல் வழங்கப்படாமல் உள்ள நிலையில் பணியாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். மேலும், பல கோயில்களில் பதவி உயர்வுக்கான அனுமதிக்கு பரிந்துரைத்ததை அனுமதி வழங்காமல் பட்டியலை ஆணையர் அலுவலகத்தில் இருந்து திரும்ப அனுப்புகின்றனர். இது, பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.

Related Stories: