மக்களவை, சட்டப்பேரவைகளில் ஆங்கிலோ இந்தியருக்கான இட ஒதுக்கீடு ரத்தாகிறது: எஸ்சி, எஸ்டிக்கு 10 ஆண்டுகள் நீட்டிப்பு

புதுடெல்லி: மக்களவை, சட்டப்பேரவைகளில் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்கிறது. அதே நேரம், எஸ்சி. எஸ்டி.க்கான இடஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு அடுத்த மாதம் 25ம் தேதி முடிகிறது. எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  இந்தியாவில் அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டபோது,  மக்களைவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும், ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கும் 334வது பிரிவின் கீழ் 70 ஆண்டுகள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில், மக்களவையிலும், சட்டப்பேரவைகளிலும் எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு குறிப்பிட்ட சதவீத இடங்கள் தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நிரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், மக்களவையிலும், சட்டப்பேரவைகளிலும் ஆங்கிலோ இந்திய பிரிவினர், நியமன அடிப்படையில் தேர்தலின்றி நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இடஒதுக்கீடு சட்டம் அடுத்த மாதம் 25ம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டில் கைவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், ஆங்கிலோ இந்தியருக்கான இடஒதுக்கீட்டை வரும் 25ம் தேதியுடன் ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளது. இவற்றுக்கான மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.  மக்களவையில் கடந்த 70 ஆண்டுகளாக ஆங்கிலோ இந்திய பிரிவினர் 2 பேர் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், நடப்பு மக்களவையில் அவர்கள் இதுவரை நியமிக்கப்படாமல் உள்ளனர். இதன் மூலம், இவர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதனால், மக்களவை மட்டுமின்றி, சட்டப்பேரவைகளிலும் இனிமேல் இவர்கள் நியமனம் செய்யப்பட மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் தற்போது எஸ்சி பிரிவைச் சேர்ந்த 84 பேரும், எஸ்.டி பிரிவைச் சேர்ந்த 47 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>