வியாபாரிக்கு வரும் லாபம் விவசாயிக்கு இல்லையே ஏன்?: பூ.விஸ்வநாதன், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர்

வெங்காயம் அன்றாட உணவுகளில் ஒதுக்க முடியாத ஒன்றாகி விட்டது. இட்லி, தோசை உட்பட எந்த ஒரு சிற்றுண்டியாக இருந்தாலும், வெங்காய சட்னி, வெங்காய சாம்பார் இல்லாமல் இருக்க முடியாது; அதுபோல, வெங்காய ஊத்தப்பம், புளிக்குழம்பு என சின்ன வெங்காயம் அன்றாட உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சின்ன வெங்காயம் பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் திருப்பூர், கோவை, நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி முதன்மையான சாகுபடி செய்யப்படுகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஹெக்டேர், அரியலூர் மாவட்டத்தில் 2,520 ஹெக்டேர் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு ஆகிறது.

Advertising
Advertising

 இந்த பருவத்தில் வடகிழக்கு பருவமழையால் பல ஆயிரம் ஏக்கரில் அழுகல் நோய் ஏற்பட்டு, சின்ன வெங்காயம் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சின்ன வெங்காயம் சாகுபடி குறைந்து விலையேற்றத்துக்கு வழிவகுத்து விட்டது. ஒவ்வொரு வருடமும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சின்ன வெங்காயம் விலையேறுவது தொடர்கதையாகி வருகிறது.  இந்த பருவ சாகுபடி காலத்தில் தான் அழுகல் நோய் ஏற்பட்டு விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் சேர்ந்து விவசாயிகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காயம் விலையேற்றத்தால் இல்லத்தரசிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. சின்ன வெங்காயம் தட்டுபாட்டை தடுக்க சின்ன வெங்காயம் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். அதே போன்று தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் ஹெக்டேரில் சின்ன  வெங்காய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் திட்டங்களை விரைவில் அறிவிப்போம் என்று கூறியிருப்பதும் சற்று ஆறுதலாக உள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்து வெங்காய சாகுபடியை அழுகல் நோய் தொற்றிக்கொள்கிறது. அந்த நோயை தமிழக அரசால் தோட்டக்கலைத்துறையால் நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கந்துவட்டிக்கு கடன் வாங்கி சிறிய அளவில் விவசாயம் சாகுபடி செய்கின்ற விவசாயி கண்ணீர் வடிக்கின்றனர். நவம்பர், டிசம்பர் மாதத்தில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 முதல் தற்போது ரூ.220க்கு வரை விற்கிறது. இந்த நிலை வருடா, வருடம் நடக்கிறது. இந்த சின்ன வெங்காயம் விலையேற்றத்தை தடுக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காய விலையேற்றத்திற்கு இடைத்தரகர்களும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தான் காரணம் என்கிறார்கள். இது பற்றி தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் ஏன் ஆய்வு செய்யவில்லை. இந்த காலகட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் விலை ரூ.30 முதல் ரூ.35 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள்.

உற்பத்தி செய்கிற விவசாயிகளுக்கு கிலோ ரூ.35 தான் லாபம் கிடைக்கிறது. ஆனால், வாங்கி விற்பவர்களுக்கு ரூ.100 முதல் ரூ.180 வரை லாபம் கிடைக்கிறது. காரணம் கேட்டால் சின்ன வெங்காய உற்பத்தி இல்லை வெங்காய வரத்து குறைந்து விட்டது. அதனால், சின்ன வெங்காயம் ரூ.100க்கு மேல் விற்கிறது என்கிறார்கள். ஆனால், உற்பத்தி செய்கிற விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதில்லை ஏன்?, இதற்கு யார் காரணம்?, சின்ன வெங்காயம் உற்பத்தி செய்கிற விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா? என விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த கேட்டு கொள்கிறோம். இந்த சின்ன வெங்காயம் விலையேற்றத்தை  தடுக்க நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காய  விலையேற்றத்திற்கு இடைதரகர்களும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும் தான்  காரணம்.

Related Stories: